'அமெரிக்காவில்' மீண்டும் தொடங்கியது 'WWE'... 'ரணகளத்துலயும்' பொழுதுபோக்குக்கு 'முக்கியத்துவம்'... 'முடங்கிக்' கிடக்கும் மக்களுக்கு 'இது தேவை'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மக்களின் அத்தியாவசிய சேவைப்பட்டியலில் WWE எனப்படும் பொழுதுபோக்கு மல்யுத்த போட்டி சேர்க்கப்பட்டதை அடுத்து மீண்டும் இப்போட்டிகள் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், மளிகை பொருட்கள், மருத்துவமனை, வங்கிகள், பொது பயன்பாட்டு நிறுவனங்கள், உணவகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது இந்த பட்டியலில் தொழில்துறை பொழுதுபோக்கு மல்யுத்த போட்டியும் (WWE) இடம்பெற்றுள்ளது. நாடு தழுவிய அளவில் பெரிய அளவில் பார்வையாளர்களை கொண்ட இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு ஊரடங்கு காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூடப்பட்ட இடங்களில் போட்டிகளை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிகளை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பொதுமக்கள் வீடுகளிலில் இருந்தபடி தொலைக்காட்சி பெட்டிகளில் போட்டியை கண்டு ரசிக்கலாம்.
அமெரிக்கா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், ஃபுளோரிடா மாகாணத்தின் பொருளாதாரத்திற்கு இது முக்கியமானது எனக் கருதப்படுகிறது. அதனால் இப்போட்டிகள் அத்தியாவசிய சேவையில் சேர்க்கப்படுவதாக புளோரிடா மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்போட்டிகளுக்கான நேரடி ஒளிப்பரப்பு திங்கள் முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஓர்லாண்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் ரசிகர்களுக்கு புதுமையான முறையில் மல்யுத்த போட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து WWE வெளியிட்ட அறிக்கையில், இந்த கடினமான நேரத்தில் மக்களை கவனத்தை திருப்புவதற்கு முன்னெப்போதும் விட இப்போதைக்கு இது மிக முக்கியமானதென தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளது.
தங்கள் நடிகர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், பொருத்தமான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இப்போட்டிகள் தயாரிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு மூடப்பட்ட செட்டில் தேவையான பணியாளர்களுடன் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஃபுளோரிடாவில் ஏப்ரல் 30ம் தேதி வரை பொதுமக்கள் வீடுகளிலே தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கும், அளிப்பதற்கும் மட்டுமே அனுமதி என்பதால் மக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
