‘என் மகனை பார்த்து 2 வாரம் ஆச்சு’.. ‘வீடியோ கால்தான் ஆறுதல்’.. ராத்திரி பகலா தூக்கமில்லாமல் உழைக்கும் நர்ஸ்களின் சோகக்கதை..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 16, 2020 12:23 PM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கு செவிலியர் ஒருவர் சோர்வுடன் கம்ப்யூட்டர் கீபோர்டு மேல் படுத்து தூங்கும் புகைப்படம் அனைவரையும் உருக வைத்துள்ளது.

Italian nurse shows effcts of coronavirus on medical staff

இத்தாலியில் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருகிறது. இதுவரை அந்நாட்டில் 20,000-க்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் கடுமையான பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் உழைப்பு சோர்வு காரணமாக கம்ப்யூட்டர் கீபோர்டு படுத்திருக்கும் செவிலியர் எலெனாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிவித்த எலெனா, ‘என்னுடைய புகைப்படங்களை எல்லா இடங்களிலும் பார்க்கும்போதும் கோவம் வருகிறது. எனது பலவீனத்தை காட்டியதில் வெட்கப்படுகிறேன். உண்மையிலேயே நான் உடலளவில் சோர்வாக உணரவில்லை. தேவைப்பட்டால் 24 மணிநேரமும் என்னால் வேலை செய்ய முடியும். இப்போது மிகவும் கவலையுடன் உள்ளேன் என்ற உண்மையை மறைக்க விரும்பவில்லை. ஏனென்றால் நான் எனக்கு தெரியாத எதிரியுடன் போராடுகிறேன். இவ்வளவு ஊழியர்கள் வேலை பார்த்தும் தொடர்ந்து இறப்புகள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. இதனால் சுகாதரத்துறையை சேர்ந்த அனைவரும் கவலையில் உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல் பெர்க்மோ நகரத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் டேனியல் மெச்சினி என்பவர், ‘என் மகனையும், குடும்பத்தையும் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்று பயமாக உள்ளது. என் மகனின் புகைப்படங்களையும், சில வீடியோ அழைப்புகளையும் கண்ணீருடன் பார்த்து என்னை ஆறுதல் படுத்திக்கொள்கிறேன்’ என முகநூலில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

டஸ்கேனி நகரத்தைச் சேர்ந்த செவிலியர் அலேசியா பொனாரி அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், மூகமூடியால் முகத்தில் ஏற்பட்ட தடத்துடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்த முகமூடி என்னுடைய முகத்தில் சரியாக பொருந்ததால் மிகவும் கவலையாக உணர்கிறேன். என்னை அறியாமல் அழுக்கு கைகளால் என்னையே நான் தொடக்கூடும். நான் அணிந்துள்ள கண்ணாடிகள் என் கண்களை முழுமையாக மறைக்காது. பாதுகாப்பு உடை அணிந்திருக்கும் ஊழியர்கள் 6 மணிநேரங்களுக்கு தண்ணீர் குடிக்கவோ, கழிப்பறைக்கு செல்லவோ முடியாது’ என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

Tags : #CORONAVIRUSUPDATES #CORONAVIRUSOUTBREAK #COVID19 #ITALYCORONAVIRUS #NURSE #VIRAL