“எனக்கு கொரோனா இல்ல.. அப்படி இருந்தாலும் தனியார் மருத்துவமனைதான் போவேன்!”.. தப்பியோடிய நபர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து ஒருவர் வந்துள்ளார். அவரிடம் கடுமையான காய்ச்சலும் கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகளும் தென்பட்டதை அடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கான தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அந்த நபர் மருத்துவமனை ஊழியர்களிடமும் மருத்துவர்களிடமும் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று வாதம் செய்துள்ளார். தவிர, தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் கூறிக் கொண்டிருந்துள்ளார். எனினும் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என மருத்துவர்கள் கண்டறிவதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது.
அதற்குள் எப்படியோ இரவு நேரத்தில் மருத்துவமனையிலிருந்து அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனை தலைமை அதிகாரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் அளித்த தகவலை வைத்து மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து பேசிய தட்சிண கன்னடா மாவட்டத்தின் சுகாதாரத்துறை அதிகாரி சிக்கந்தர் பாட்சா, கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள் 24 மணி நேரம் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் அதன் பின்பே பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் டிஸ் சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு தப்பி ஓடியவரை கண்டுபிடிக்க காவல்துறையின் உதவியை நாடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.