‘கொரோனாவுக்கு’ பயப்படல... இந்த நேரத்துல ‘இதுதான்’ தேவை... மனங்களை ‘வென்ற’ மருத்துவருக்கு ‘குவியும்’ நன்றிகள்... ‘வைரல்’ பதிவு...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Mar 11, 2020 04:33 PM

கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பகிர்ந்துள்ள கொரோனா குறித்த பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.

Canada Doctors Facebook Post About Corona Virus Goes Viral

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மக்களிடையே கொரோனா குறித்து இருக்கும் அச்சம் பற்றி பேஸ்புக் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அப்து ஷர்கவி எனும் அவர் அந்தப் பதிவில், “தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரான நான் 20 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டவர்களை தினமும் சந்தித்து வருகிறேன். நான் கொரோனாவைப் பார்த்து பயப்படவில்லை. ஆனால், சமூகத்தில் பொது மக்களிடையே கொரோனா காரணமாக எழுந்துள்ள அச்சத்தை நினைத்து பயப்படுகிறேன்.

உலகெங்கிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக வைரஸால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள், பலவீனமாக உள்ளவர்களை நினைத்து கவலைப்படுகிறேன். மருத்துவமனைகளிலிருந்து  N95 முகக் கவசங்கள் அதிகமாக திருடப்படுவதை நினைத்துக் கவலைப்படுகிறேன். உண்மையிலேயே முகக்கவசங்கள் சுகாதாரத்துறையினருக்குத்தான் தேவைப்படுகின்றன. ஆனால், அவற்றை மக்கள் விமான நிலையங்கள், மால்கள் போன்ற இடங்களில் அணிந்துகொள்கிறார்கள். ஒருவருடைய பயம் மற்றவர்கள் மீதான சந்தேகத்தையே அதிகப்படுத்துகிறது.

இந்த அச்சுறுத்தல் குறித்து நம்முடைய குழந்தைகளிடம் என்ன சொல்லப்போகிறோம் என்றே நான் மிகவும் பயப்படுகிறேன். பகுத்தறிவு, திறந்த மனப்பான்மை, நல்ல பண்புகள் ஆகியவற்றிற்குப் பதிலாக பயப்படவும், சந்தேகிக்கவும், சுயநலமாக யோசிக்கவும்தான் அவர்களுக்கு கற்றுத்தரப்போகிறோமா? உங்களது நகரத்திற்கோ, நண்பருக்கோ, உங்களுக்கு அருகிலுள்ள ஒருவருக்கோ வைரஸ் தொற்று ஏற்படலாம். ஆனால் வைரஸால் ஏற்படும் தீங்கை விட, நம்முடைய செயல்கள், நமக்காக மட்டுமே சிந்திக்கும் அணுகுமுறைகள் ஆகியவைதான் அதிக தீங்கை ஏற்படுத்தும்.

சமூகத்தில் பரவும் எண்ணற்ற நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்தும், சுகாதாரம் குறித்தும் கற்றுக்கொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. மற்றவர்கள் மீதான இரக்கம், அமைதியுடன் ஒற்றுமையாக இந்தச் சவாலை எதிர்கொள்வோம். உங்கள் கைகளைக் கழுவுங்கள். திறந்த மனதுடன் இருங்கள். நம்முடைய குழந்தைகள் பிற்காலத்தில் நமக்கு நன்றி கூறுவார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் எய்ட்ஸ், காசநோய், சார்ஸ், தட்டம்மை உள்ளிட்ட உலகை அச்சுறுத்திய பல கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்துள்ளபோதும், சார்ஸ் நோயைத் தவிர மற்றவை அதிகமான பயத்தை ஏற்படுத்தவில்லை என அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பலரும் அச்சத்தில் உள்ள சூழ்நிலையில் மருத்துவர் அப்து ஷர்கவி மிகவும் சரியான விஷயத்தைப் பேசியுள்ளது ஆறுதல் அளிப்பதாக பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags : #FACEBOOK #CORONA #VIRAL #DOCTOR