'நாங்க கொரோனாவ பரப்பல...' 'அப்படி சொல்லாதீங்க அது தப்பு...' 'எங்க லேப் பத்தி எங்களுக்கு தெரியும்...' வூகான் ஆய்வக இயக்குனர் பதிலடி...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் ஒரு ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சீனாவில் இயங்கிவரும் தீநுண்மியியல் ஆய்வகத்தின் இயக்குநா்.

இன்றைய சூழலில் உலக நாடுகள் அனைத்தையும் நடுங்க செய்துள்ளது கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸானது வௌவால்களிலிருந்து எறும்பு தீனிக்கு இடம் பெயர்ந்து அதிலிருந்து மனிதர்களுக்கு பரவியது என சீனா வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. உலக அளவில் சுமார் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் இறப்பு எண்ணிக்கையும் 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
ஆனால் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு, உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தையும், பொருளாதார சரிவைவையும் ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் ஆய்வகத்திலிருந்தே பரவியதாக வூஹானில் இயங்கும் தீநுண்மியியல் ஆய்வகத்தின் மீது குற்றசாட்டு தெரிவித்தார்.
மேலும் ஆசியாவில் தீநுண்மியியல் ஆய்வகம் மட்டும் தான் மனிதர்களுக்கு பரவும் எபோலா போன்ற கொடிய வைரஸ்களைக் கையாண்டு வருகிறது எனவே அங்கிருந்து கரோனா தற்செயலாக வெளியேறியிருக்கலாம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ ஆகியோா் கூறியிருந்த நிலையில் தற்போது தீநுண்மியியல் ஆய்வக இயக்குனர் அதை மறுத்துள்ளார்.
முதன் முறையாக சீனாவின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஆய்வகத்தின் இயக்குநா் யுவான் ஷிமிங், கொரோனா வைரஸ் தங்கள் ஆய்வகத்திலிருந்து பரவியது என்ற குற்றசாட்டு முற்றிலும் முகாந்திரமற்றது. கொரோனா வைரஸ் எங்கள் ஆய்வகத்தில் இருந்து பரவ எந்த வாய்ப்பும் இல்லை எனவும், வூஹான் ஆய்வகத்தில் எம்மாதிரியான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன, தீநுண்மிகளை நாங்கள் எவ்வாறு கையாள்கிறோம் என்பது குறித்து எங்களுக்கு நன்றாகவே தெரியும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தங்கள் ஆய்வகம் மிகுந்த பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து வருவதாகவும், விதிமுறைகளைப் பின்பற்றியே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் எனவும் கூறியுள்ளார். இதனால் தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எங்கள் ஆய்வகம் தான் காரணம் என கூறுவது தவறு. இவ்வாறு குற்றசாட்டை கூறுவதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. மேலும் தன் நாட்டு மக்களையும், உலக மக்களையும் திசை திருப்பவே அமெரிக்க இதுபோன்று செய்திகளை வெளியிட்டு வருகிறது என கூறியுள்ளார் வூஹானில் இயங்கும் தீநுண்மியியல் ஆய்வக இயக்குநா் யுவான் ஷிமிங்.
