வீடியோ : 'கொரோனா' உருவபொம்மையை எரித்து 'ஹோலி' கொண்டாட்டம்... "இதனாலதான் கொரோனா இந்தியா பக்கம் வரவே பயப்படுது..."
முகப்பு > செய்திகள் > இந்தியாமஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் கொரோனா வைரஸ் உருவ பொம்மையை பெரியதாக வடிவமைத்து அதை தீ வைத்து எரித்து ஹோலிகா தகன நிகழ்ச்சியை கொண்டாடினர்.

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த நிகழ்வின்போது, ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி தங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் பகிர்ந்து கொள்வர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா அச்சம் நிலவுவதால் முன்னெச்சரிக்கையாக பிரதமர் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் ஹோலி கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளனர்.
ஆனால் பொதுமக்கள் எந்த வித தொய்வுமின்றி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை, கவுஹாத்தி, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் நேற்று இரவு ஹோலிகா தகன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ராவணனின் உருவபொம்மையை பெரிதாக உருவாக்கி அதனை தீ வைத்த எரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் இன்னும் ஒருபடி மேலே போய் ‘கொரோனா வைரஸை’யே எரித்து ஹோலி கொண்டாடியுள்ளனர். கொரோனா வைரஸ் உருவ பொம்மையை பெரியதாக வடிவமைத்து அதை தீ வைத்து எரித்து ஹோலிகா தகன நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. தற்போது நாட்டில் உடனடியாக அழிக்கப்பட வேண்டிய அரக்கன் கொரோனா வைரஸ்தான் என்ற பொருள்படும்படியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
