‘ரயில்வே பிளாட்பாரத்தில்’... ‘தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த’... ‘ஒரு வயது குழந்தையை’... ‘இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 11, 2019 09:09 AM

ரயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை, இளைஞர் ஒருவர், கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

youth try to kidnap one year old baby in arakkonam

வேலூர் மாவட்டம் சோளிங்கர் ரயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளங்களில், ஜல்லி கற்கள் நிரப்பும் பணியில், தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த திங்கள்கிழமையன்று இரவு, பணி முடிந்தப் பிறகு தொழிலாளர்கள் அனைவரும் ரயில்நிலைய பிளாட்பார பகுதியில் தூங்கினர். இதில் 22 வயதான துர்காபிரசாத் மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர், தங்களது ஒரு வயது குழந்தையுடன் தூங்கினர்.

கடந்த செவ்வாய்கிழமையன்று அதிகாலை, 4 மணியளவில் குழந்தை திடீரென அழுதுள்ளது. இதனால் துர்காபிரசாத், பார்வதி ஆகியோர் கண்விழித்து பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதனால் அந்த இளைஞர், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினார். சத்தம் கேட்ட சக தொழிலாளர்கள், அந்த இளைஞரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் பிளாட்பாரத்தில் இருந்த கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரை மீட்டு விசாரித்தனர். அவர் வாலாஜா அணைக்கட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தினேஷ் என்பதும், குடிபோதையில் குழந்தையை தூக்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தினேஷை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : #KIDNAP #ATTEMPT #YOUTH