‘பீகாரில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட பள்ளி சிறுமி’.. சினிமாவை விஞ்சிய கடத்தல் நெட்வொர்க்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 01, 2019 07:49 PM

பீகாரைச் சேர்ந்த பள்ளி சிறுமி பாலியல் தொழிலுக்காக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சம்பவம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Bihar girl rescued from Dindigul after 25 days

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஜீன் மாதம் காணமல் போயுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பீகார் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மணீஷா குமாரி என்ற பெண் சிறுமியை அழைத்து சென்றதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பாட்னா நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் போலிஸை கண்டது பயந்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மணீஷா குமாரி என்பது தெரியவந்துள்ளது. அப்பெண்ணிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், சிறுமியை ரூ.400 -க்கு பிரகாஷ் யாதவ் என்பவரிடம் விற்றதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் பதுங்கி இருந்த பிரகாஷ் யாதவை போலிஸார் கைது செய்து விசாரித்ததில், அவர் அன்சாரி என்பவரிடம் சிறுமியை விற்றுவிட்டதாகவும், தற்போது அவர் எங்கு இருப்பார் என தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தந்தைக்கு மர்ம நபர் போன் செய்து தனது குழந்தையை விடுவிக்க வேண்டுமானால் 5 லட்சம் தரவேண்டும் எனவும், இல்லையென்றால் பாலியல் தொழிலுக்கு அனுப்பிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் பதறிப்போன சிறுமியின் தந்தை இதுகுறித்து போலிஸாரிடம் தெரிவித்துள்ளார். உடனே அந்த தொலைபேசி எண்ணை ஆராய்த்து பார்த்ததில், அது அன்சாரியின் போன் நம்பர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த எண்ணில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் தங்கியிருந்த ரஜியா என்ற பெண்ணிடம் அன்சாரி அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது.

இதனால் தமிழக போலிஸாரின் உதவியுடன் திண்டுக்கலில் உள்ள ரஜியாவின் வீட்டில் சென்று பார்த்தபோது கடத்தப்பட்ட சிறுமி அங்கே இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். 25 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் அங்கிருந்த சிறுமியை பத்திரமாக போலிஸார் மீட்டுள்ளனர். பின்னர் போலிஸார் விசாரித்ததில் ரஜியா என்ற பெண் அன்சாரியின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் மிகப்பெரிய நெட்வொர்க் வைத்து பள்ளி சிறுமிகளை கடத்தி பல ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடத்தலில் சம்பந்தப்பட்ட 6 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #DINDUGUL #BIHAR #GIRL #POLICE #KIDNAP