‘பள்ளியில் விடுவதாக லிஃப்ட் கொடுத்து’.. ‘போதை இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘சென்னை அருகே பரபரப்பு’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Aug 23, 2019 12:44 PM
சென்னை அருகே போதையில் பள்ளிக் குழந்தைகளை கடத்திச் சென்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஏரிமேட்டை சேர்ந்த வீரன் என்பவருடைய குழந்தைகளான தனுஸ்ரீ, அருண் ஆகியோர் நேற்று வழக்கம்போல பள்ளிக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அவர்களை பள்ளியில் இறக்கிவிடுவதாக கூறி லிஃப்ட் கொடுத்துள்ளார். ஆனால் பள்ளியைத் தாண்டியும் அந்த நபர் வாகனத்தை நிறுத்தாமலேயே சென்றுள்ளார்.
தங்களுடைய நண்பர்கள் உள்ள வாகனம் பள்ளியைத் தாண்டியும் நிற்காமல் செல்வதைப் பார்த்த சக மாணவர்கள் உடனடியாக இதுகுறித்து பள்ளியில் ஆசிரியரிடம் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு கிராம மக்களும் அந்த இளைஞரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கிராம மக்களின் 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை கடத்திச் சென்ற இளைஞர் பிடிபட்டுள்ளார். போதையில் இருந்த அவரிடமிருந்து குழந்தைகளை மீட்ட கிராமத்தினர் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் விசாரித்ததில் அவர் கேசவபுரம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் எனத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.