'தேனிலவு சென்ற சென்னை தம்பதி '.. 'மனைவி கண்முன்னே பாராகிளைடரில் இருந்து விழுந்த கணவர்'!.. திருமணமான ஒரே வாரத்தில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 19, 2019 08:58 AM

தேனிலவுக்கு சென்ற சென்னை இளைஞர், பாராகிளைடரில் பறந்தபோது மனைவி கண்முன்னே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai man on honeymoon dies during paragliding in Kullu

சென்னை அமைந்தக்கரையை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து தேனிலவுக்காக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலுமணாலிக்கு சென்றுள்ளனர். அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் குலு அருகே டோபி என்ற இடத்தில் உள்ள பாராகிளைடர் சுற்றுலா தளத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு அரவிந்தும், பிரீத்தியும் பாராகிளைடரில் பறக்க முன்பதிவு செய்து சென்றுள்ளனர். முதலில் பிரீத்தி பாராகிளைடரில் பறந்துவிட்டு கீழே இறங்கியுள்ளார். இதனை அடுத்து அரவிந்த் பறந்துள்ளார். கணவர் உயரே பறந்துகொண்டிருப்பதை பிரீத்தி கீழே இருந்து ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அரவிந்த் கட்டியிருந்த பாதுகாப்பு பெல்ட் கழன்றதாக கூறப்படுகிறது.

இதனால் பல அடி உயரத்தில் இருந்து அரவிந்த் கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரவிந்த் கீழே விழுந்தவுடன் அவசரமாக பாராகிளைடரை கீழே இறக்க முயன்ற பாராகிளைடிங் பைலட் ஹரு ராமு என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அரவிந்த் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அவரது உடலை ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து டெல்லி கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரவிந்த் உடலை பெற்றுகொள்வதற்காக அவரது உறவினர்கள் சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளனர். தேனிலவு சென்ற இடத்தில் மனைவி கண்முன்னே பாராகிளைடரில் இருந்து கணவர் விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #CHENNAI #DIES #KULLUMANALI #HONEYMOON #PARAGLIDING