‘சென்னையில் எப்போது கனமழைக்கு வாய்ப்பு?’.. ‘தமிழ்நாடு வெதர்மேன் தகவல்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Nov 19, 2019 02:29 PM
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் வரும் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்துவருகிறது. சென்னையைப் பொறுத்தவரை அக்டோபர் மாதம் நல்ல மழை பெய்திருந்த நிலையில், அதற்கு பிறகு அதிகளவு மழை இல்லை. இந்நிலையில் சென்னையில் அடுத்து எப்போது கனமழையை எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் பதிவில், “சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் கடந்த 14 முதல் 16ஆம் தேதி வரை நல்ல மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் அந்த மழை நெல்லூருக்குச் சென்றுவிட்டது. மீண்டும் வரும் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவாரூரில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில் மற்ற கடலோர மாவட்டங்களான கடலூர், புதுச்சேரி, நாகை, திருவாரூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்யும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய நல்ல மழை பெய்யும். உள் மாவட்டங்களை பொறுத்தவரை விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூரில் வரும் 20-21ஆம் தேதிகளில் மழை வெளுத்து வாங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
