‘சின்னப் பொண்ணுவ விட்ருங்க’... ‘பதறிப்போய் ஃபோன் செய்த நபர்கள்'... ‘சென்னை பார்க் ஸ்டேஷனில் நிகழ்ந்த பரபரப்பு’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 19, 2019 01:54 PM

சென்னை பார்க் ஸ்டேஷனில் பிரபலமான சின்னப் பொண்ணு என்ற நாய் காணாமல் போனதால், அனைவரும் பதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

chinna ponnu dog missing in chennai park train station

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் (Park Station), சுற்றி வரும் நாய்களில், நன்கு பரிட்ஷயமானது சின்னப் பொண்ணு. அங்கு பயணிக்கும் பயணிகள் மட்டுமின்றி, வணிகர்கள், ரயில்வே போலீசார் என அனைவரும் சின்னப் பொண்ணுவை அறிந்து வைத்துள்ளனர். இந்த சின்னப் பொண்ணு செய்யும் வேலைதான் ஆச்சரியமளிக்கும் ஒன்று. அதாவது, பார்க் ஸ்டேஷனில், பிளாட்ஃபார்மை பயன்படுத்தாமல், தண்டவாளத்தை கடக்கும் பயணிகளை, இந்த சின்னப் பொண்ணு விடாமல் துரத்தி குரைத்து எச்சரிக்கை செய்யும்.

மேலும், ரயிலின் வேகத்திற்கு ஏற்ப அதன் கூடவே ஓடிச் சென்று, மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே பயணிக்கும் நபர்களை, ரயிலுக்குள் செல்ல சின்னப் பொண்ணு நிர்பந்திக்கும். ரயில் நிற்பதற்கு முன்பு இறங்குபவர்கள், ஓடும் ரயிலில் ஏற முயற்சிப்பவர்களையும் பார்த்து பலமாக குரைக்கும். அதேநேரம், பாதுகாப்பாக நடைமேடையில் நடந்து செல்லும் பயணிகளை, சின்னப் பொண்ணு ஒன்றும் செய்யாது. அங்கு பணியில் இருக்கும் ரயில்வே போலீசாருடன் சேர்ந்து, இரவுப் பகல் பாராது ரோந்துப் பணியிலும் ஈடுபடும்.

இதனால், ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் சின்னப் பொண்ணு வைரலானது. இந்நிலையில், பார்க் ஸ்டேஷனில் நாய்களால் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் சிலர் புகார் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், கடந்த திங்கள்கிழமை அன்று, ரயில் நிலையத்துக்கு வந்து 4 நாய்களை பிடித்துச் சென்றனர். சின்னப் பொண்ணுவையும் அவர்கள் பிடித்துச் சென்றதாக கூறப்பட்டதால், போலீசார், கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, உடனடியாக சிலர், மாநகராட்சி அலுவலகத்தை ஃபோனில் தொடர்புகொண்டு, கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்கும் சின்னப் பொண்ணுவை விடுவிக்குமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் சின்னப் பொண்ணுவை விடுவித்தனர். ஆனால், அது சின்னப் பொண்ணு இல்லை என்று தெரிந்ததும், சின்னப் பொண்ணுவை நினைத்து, அங்குள்ளவர்கள் கலங்கினர். இந்நிலையில், பூங்கா ரயில் நிலையத்தில், சில இளைஞர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல அதன் அருகே சென்றனர்.

அப்போது வேகமாக குரைத்தபடியே அவர்களை நோக்கி ஓடிவந்து அவர்களை தடுத்தது சின்னப் பொண்ணு. மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்க வந்த நேரத்தில், சாதுர்யமாக அங்கிருந்து தப்பிச் சென்ற சின்னப் பொண்ணு, சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் பூங்கா ரயில் நிலையத்துக்கு திரும்பியதால், அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். சின்னப் பொண்ணு திரும்பியதை அறிந்த மாநகராட்சி ஊழியர்கள், அதற்கு இன்று காலை தடுப்பூசி போட்டு பின்னர் விடுவித்தனர். தற்போது இந்த சின்னப் பொண்ணு ஆங்கில ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

Tags : #DOG #CHENNAI #PARK #STATION