வீட்டைச் சுற்றி 'வேப்பிலை', 'மஞ்சள்' ... 'கொரோனாவ ஒண்ணும் பண்ணாது', இருந்தாலும் ... புதிய முயற்சியை கையிலெடுத்த கரூர் பெண்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுய ஊரடங்கு உத்தரவையொட்டி கரூர் அருகேயுள்ள கிராம மக்கள் தினமும் மாலையில் மஞ்சள் நீர் தெளித்து விளக்கேற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தின் கிராமத்து பகுதிகளில் உள்ள பெண்கள் தினமும் மாலையில் தங்களது வீடு வாசலில் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் கரைத்து, அதன் மீது வேப்பிலையை வைத்து விளக்கேற்றி வினோத வழிபாடு நடத்தி வருகிறார்கள். மேலும் வீடை சுற்றி வேப்பிலை தோரணங்களை கட்டி தொங்க விட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியிலுள்ள பெண் ஒருவர் கூறுகையில், 'இப்படி நாங்கள் வழிபாடு செய்து வருவதால் கொரோனா வைரசை ஒழிக்க முடியும் என நினைக்கவில்லை. தற்போது மக்களிடையே உள்ள பயத்தைப் போக்கத் தேவையான ஒன்று, நம்பிக்கை. அந்த நம்பிக்கையை ஏற்படுத்த தான் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறோம். இதன் மூலம் அனைவரின் வீடும் தூய்மையால் நிரம்பப்பெற்று, கெட்ட சக்திகள் விலகி மக்கள் சுய ஊரடங்கை சிறப்பாக கடைபிடிக்க உதவும் என நம்புகிறோம்' என தெரிவித்துள்ளார்.
