'புதுக்கோட்டை' மாணவ மணிகளே ... வீட்ல போர் அடிக்குதா, இந்த சான்ஸ் உங்களுக்கு தான் ... புதுகோட்டை கலெக்டரின் சூப்பர் முயற்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரமடைந்து வருகிறது. மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் கூடுவதை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டிருந்தது. நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த நேரத்தை சிறந்ததாக செலவழிக்க புதிய முயற்சி ஒன்றை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விடுமுறையில் இருக்கும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தபடியே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கதை, கவிதை ஓவியங்கள் ஆகியவற்றை வரைந்து கீழ்கண்ட வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்புங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் தங்கள் படைப்புகளை 98651 20738 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் 9443488869 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும், 9 முதல் பிளஸ்2 மாணவ, மாணவிகள் 73737 97250 என்ற எண்ணுக்கும், கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை 9786382393 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறுகையில், 'பொதுவாக விடுமுறையின் போது குழந்தைகள் ஒன்று கூடி விளையாட எண்ணுவார்கள். தற்போது அதற்கான சூழ்நிலை இல்லாத நிலையில் அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.