கட்டக்கடைசியாக கரூர் 'ஜவுளியிலும்' கைவைத்த கொரோனா... மொத்தமா 'ஆப்பு' வைச்சுருச்சு... எவ்ளோ 'நஷ்டம்னு' பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா கரூர் ஜவுளிப்பொருட்களிலும் கைவைத்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவுவதால் ஏற்றுமதி, இறக்குமதி விற்பனை தற்போது அதலபாதாளதிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் தொழில் நகரமான கரூரிலும் கொரோனா தற்போது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது. தொழில் நகரமான கரூரில் இருந்து வீட்டு உபயோக ஜவுளி பொருட்களான திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், கால் மிதியடிகள், அலங்கார குஷன்கள், கையுறை ஆகியவை ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐரோப்பிய நாடுகளில் தற்போது பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கரூர் ஜவுளி ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் தற்போது 500 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கரூர் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், '' ஆண்டுக்கு சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். தற்போது வெளிநாடுகளில் உள்ள வியாபாரிகள் ஜவுளிகள் அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
ஏற்கனவே அவர்கள் கொடுத்திருந்த ஆர்டரையும் ரத்து செய்து விட்டனர். அங்குள்ள அலுவலகங்கள், வங்கிகள் மூடப்பட்டு விட்டதால் பணப்பரிவர்த்தனை நின்று விட்டது. பணம் வராமல் ஜவுளி ஏற்றுமதி செய்ய முடியாது. இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கொரோனா பாதிப்பை பொறுத்து அடுத்தகட்ட தீர்மானிக்க முடிவு செய்துள்ளோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.
