இனி ‘2 நாட்களில்’ அதே நம்பருடன்... எந்த ‘நெட்வொர்க்கிற்கும்’ ஈஸியா மாறலாம்... விவரங்கள் உள்ளே...
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Saranya | Dec 16, 2019 04:47 PM
வாடிக்கையாளர்கள் செல்ஃபோன் எண்ணை மாற்றாமல் இனி எந்தவொரு நெட்வொர்க் நிறுவனத்திற்கும் 2 நாட்களில் மாறும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் அதே செல்ஃபோன் எண்ணுடன் வேறு நெட்வொர்க் நிறுவனத்திற்கு மாறும் எம்என்பி சேவையைப் பெற முன்னதாக ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகும். ஆனால் ட்ராய் இன்று முதல் அமல்படுத்தியுள்ள புதிய நடைமுறையால் 2 நாட்களில் அந்த சேவையைப் பெற முடியும்.
ட்ராய் நடைமுறைப்படி, முன்னர் 96 மணி நேரத்தில் பெறக்கூடிய சேவையாக இருந்த இந்த எம்என்பி சேவை தற்போது 48 மணி நேரத்தில் பெறக்கூடியதாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் அதற்கான கோரிக்கையை முன்வைத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் அவர்கள் விரும்பும் நெட்வொர்க் நிறுவனத்திற்கு மாறிவிட முடியும்.
போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் விரும்பும் நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு தங்களுடைய நிலுவைத்தொகை முழுவதையும் செலுத்தி இருக்க வேண்டும். மேலும் மாற விரும்பும் வாடிக்கையாளர் தற்போது இருக்கும் நெட்வொர்க் நிறுவனத்தின் கீழ் 90 நாட்களுக்கு வாடிக்கையாளராக இருந்திருக்க வேண்டும்.
இந்த சேவையைப் பெற விரும்புபவர்கள் தங்களுடைய செல்ஃபோன் எண்ணிலிருந்து PORT(Space)XXXXXXXXXX (செல்ஃபோன் எண்) என டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அடுத்த 5 நிமிடங்களில் அவர்களுக்கான யூபிசி தடம் உருவாக்கப்பட்டு ட்ரான்ஸ்ஃபர் பணிகள் தொடங்கப்பட்டுவிடும். அதற்குபிறகு வாடிக்கையாளர் புதிதாக மாற விரும்பும் நிறுவனத்திற்கு அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று அளித்த பின்னர் எளிதில் மாறிக் கொள்ளலாம்.
