வீட்டுக்குள் இருந்து கேட்ட ‘அலறல்’ சத்தம்... ‘பதறியடித்து’ ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘சென்னையில்’ சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Dec 11, 2019 08:04 PM
சென்னையில் கார்த்திகை தீப கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா (72). கார்த்திகை தீபத்தை ஒட்டி அவர் நேற்று இரவு வீட்டில் விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எரிந்துகொண்டிருந்த விளக்கிலிருந்து அவருடைய சேலையில் தீ பற்றியுள்ளது. இதையடுத்து நொடியில் பற்றிய தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் அவர் அலறித் துடித்துள்ளார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீஸார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மேலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை தீபத்தை ஒட்டி சென்னையில் வண்ணாரப்பேட்டை, மதுரவாயல், வேளச்சேரி, திருவொற்றியூர் உட்பட 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூரைச் சேர்ந்த செல்வம் என்பவர் கார்த்திகை தீபத்தை ஒட்டி ராக்கெட் பட்டாசு வெடித்தபோது மாட்டுக்கொட்டகையில் தீப்பொறி பட்டு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கன்றுக்குட்டி, 20 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன. இதைத்தவிர மற்ற இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.