‘கணவர் தம்பியுடன் சேர்ந்து பலே திட்டம்’!.. ‘சிசிடிவி-ல் காட்டிக்கொடுத்த வளையல்’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Dec 12, 2019 05:16 PM
சென்னையில் கணவர் தம்பியுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள கள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவர் தனது வீட்டின் அருகில் ஒரு மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 6ம் தேதி மதியம் பேச்சியம்மாள் தனியாக கடையில் இருந்துள்ளார். அப்போது ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருந்துள்ளது. அந்த சமயம் கடைக்குள் வந்த இளைஞர் திடீரென பேச்சியம்மாளின் செயினை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பேச்சியம்மாள் கூச்சலிட்டுள்ளார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வேகமாக ஓடி வந்துள்ளனர். அதற்குள் அந்த நபர் செயினுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது செயினை பறித்துச் சென்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் செல்வதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். இருசக்கர வாகனத்தின் முன்னாள் அமர்ந்திருப்பவர் ரெயின் கோர்ட் மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரின் முகம் தெரியவில்லை.
இதனை அடுத்து இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை சோதனை செய்ததில், அது போலியான நம்பர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 64 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது வில்லிவாக்கம் பகுதியில் அந்த இருசக்கர வாகனம் சென்றதை போலீசார் கண்டு பிடித்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் வந்ததை போலீசார் பார்த்துள்ளனர். உடனே அப்பெண்ணை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். போலீசார் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் சந்தேகம் வராதவாறு பதிலளித்துள்ளார். அப்போது சிசிடிவியில் வாகனத்தை ஓட்டியவரின் கையில் இருந்த வளையல்களை அப்பெண்ணின் கைகளில் பார்த்ததும் போலீசார் உஷாராகியுள்ளனர்.
இதனை அடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அப்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அவர் வில்லிவாக்கம் மேஸ்திரி தெருவை சேர்ந்த ரேவதி (30) என்பது தெரியவந்துள்ளது. மேலும் தனது கணவரின் தம்பி ராஜேஷ் (31) என்பவருடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. காலையில் டிபன் கடையும், மதியம் கணவரின் தம்பியுடன் சேர்ந்து செயின் பறிப்பிலும் ரேவதி ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.