'மாமனார், மருமகள் சேர்ந்து நடத்திய நாடகம்'... ‘விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி’... 'எச்சரித்து அனுப்பிய போலீஸ்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 10, 2019 12:11 PM

110 சவரன் நகைகள் கொள்ளைப் போன சம்பவத்தில், மாமனார், மருமகள் சேர்ந்து நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது.

woman and man warned by police on fraud complaint on jewelry

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே செக்குவிளையைச் சேர்ந்தவர் ராஜையன் (60). துணி வியாபாரியான இவருக்கு, 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அதில் 2 மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணமாகிய நிலையில், மனைவி மற்றும் மகன்களுடன், அடுத்தடுத்து உள்ள 2 வீடுகளில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை குமாரகோவிலில் உள்ள முருகன் கோவிலுக்கு, ராஜையன் குடும்பத்தினர் சென்றனர். அப்போது பாதி வழியில் இறங்கிய மூத்த மருமகள் பிரீதா, உடல்நலம் சரியில்லாத தன்னுடைய தோழியை பார்த்து விட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

மூத்த மருமகள் இல்லாமலேயே சாமி கும்பிட்டு விட்டு ராஜையன் குடும்பத்தினர் மாலை வீடு திரும்பியபோது, பிரீதா முகத்தில் மிளகாய் பொடிகள் வீசப்பட்டும், துப்பட்டாவால் கழுத்துப் பகுதி கட்டப்பட்டும் கிடந்ததைக் கண்டும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் விசாரித்ததில், ‘தோழியை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தபோது, வீடு திறந்த நிலையில் கிடந்ததால், ஓடி வந்து பார்த்தேன். வீட்டுக்குள் இருந்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர், என்னை தாக்கி துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி விட்டும், மிளகாய் பொடி தூவியும் தப்பி சென்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து, வீட்டின் ஓர் அறையின் ஓரத்தில், குழி தோண்டி புதைத்து வைத்த 110 சவரன் நகைகள் மர்மநபர்கள் திருடிச் சென்றதாக, மாமனாரும், மருமகளும் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பழைய பொருட்களால் மூடப்பட்டு இருந்த குழியை தோண்டி மர்மநபர்கள் எப்படி நகையை எடுத்து சென்றனர் என்று குழப்பத்தில் அழ்ந்த நிலையில், எந்த தடயங்களும் சிக்காததால், தனித்தனியாக அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 110 சவரன் அளவுக்கு நகைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை என அவர்கள் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், ராஜையனிடமும், பிரீதாவிடமும் துருவித் துருவி விசாரித்தனர். அதில் தான் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. மொத்தம் 60 சவரன் நகைகள் மட்டுமே வீட்டிலிருந்த நிலையில், அதில் 50 சவரன் நகைகளை விற்று இளைய மகளின் கடன்களை அடைத்த ராஜையன், குடும்பத்தில் குழப்பம் வராமல் இருக்க, 10 சவரன் நகைகளை மட்டும், மூத்த மருமகள் பிரீதா முன்னிலையில் வீட்டின் மூலையில் புதைத்து வைத்துள்ளார்.

இதேபோல், புதைத்து வைத்த நகைகளை யாருக்கும் தெரியாமல் சிறுக சிறுக எடுத்து செலவு செய்த மருமகள் பிரீதா, அவை கொள்ளை போய்விட்டதாக அனைவரையும் நம்ப வைக்க கொள்ளை நாடகத்தை நடத்தியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த மாமனார் ராஜையனும், 110 சவரன் நகைகள் கொள்ளை போனதாக கூறியுள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என எழுதி வாங்கிய போலீசார், அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்ம் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags : #THEFT #JEWELS #FATHERINLAW #DAUGHTERINLAW