'எங்க ஊர்ல எல்லாருமே திருடுவோம்!'... 'உங்க செயின் அறுந்துருச்சுனு ஒருத்தி சொல்லுவா!.. அப்புறம் அப்படியே!'.. அதிரவைத்த ஆட்டோ 'அகிலா'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 09, 2019 07:50 PM
சென்னையில் மூதாட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பி ஆட்டோவில் வந்த 3 பெண்கள் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சம்பவம் பற்றி காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன.
கடந்த 3-ஆம் தேதி மதியம், பொன்னியம்மன் மேடு பிரகாஷ் நகரைச் சேர்ந்த ஜூலியா ஜெயராஜ் என்கிற 82 வயது மூதாட்டியை பெரம்பூர் சர்ச் ரோடு பகுதியில் சென்ற ஆட்டோவில் ஏறி, ஏமாற்றி ஆட்டோவில் பயணித்த 3 பெண்கள் 3 சவரன் தங்கச் சங்கிலியை அபேஸ் செய்தனர். இதுகுறித்து மூதாட்டி ஜூலியா அளித்த புகாரின் பேரில், தனிப்படை போலீஸார் விசாரணையில் இறங்கினர். அப்போது தெரியவந்த தகவல்களின்படி, அந்த பெண்களுள், ஆட்டோவில் பயணிக்கும் மூதாட்டிகளிடம், முதலில் செயின் அறுந்து விழுவது போல் இருப்பதாக ஒரு பெண் கூறுவார். உடனே பதட்டமாகும் மூதாட்டிகளின் செயினை கழற்ற, இன்னொரு பெண் உதவுவார். 3வது பெண் மூதாட்டிகளின் செயினை, அவர்கள் வைத்திருக்கும் கைப்பைகளில் வைக்க உதவுவது போல் பாவனை செய்துவிட்டு, நகையை ஈஸியாக திருடிவிட, மூவரும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
இந்த வியூகத்தை தெரிந்து கொண்ட போலீஸார், மூதாட்டியை விசாரிக்கும்போது, அந்த பெண்கள் தெலுங்கில் பேசியது தெரியவர, ஆந்திராவின் சித்தூர் குப்பம் கிராமத்தில் இருந்து சென்னைக்குக் கொள்ளையடிக்க வரும் கும்பல் பற்றிய தகவல்கள் கிடைத்தன. இதனை அடுத்து, அந்த ஊருக்கு விரைந்த சென்னை போலீஸாரை அந்த ஊரே எதிர்த்து, தடுத்துள்ளது. ஆனாலும் சமாளித்து, அங்கிருந்து 28 வயதான அகிலா என்கிற பெண்ணை மட்டும் ஆந்திர லோக்கல் போலீஸாரின் உதவியோடு பல சவால்களையும், ஊர் மக்களின் கெடுபிடியையும் கடந்து சென்னை அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
முன்னதாக விசாரணையில், ‘எங்கள் ஊரே திருடும், டீமுக்கு 3 பெண்கள் சேர்ந்து திட்டம் போட்டு திருடுவோம். 5 ஆண்டுகளாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் எங்கள் மீது 4 மாநில காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பூர் சர்ச் ரோட்டில் மூதாட்டி செயினை நானும் எனது கூட்டாளிகளான கனகா, அலமேலு 3 பேரும் சேர்ந்து பறித்தோம்’ என்று அகிலா கூறியுள்ளதை அடுத்து, அகிலாவின் கூட்டாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். அகிலாவிடம் இருந்து 2 சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.