‘ஓடும் ரயிலில் படிக்கட்டில்’... ‘செல்ஃபோன் பார்த்தபடி பயணித்த இளைஞருக்கு’... ‘4 பேரால் நேர்ந்த பயங்கரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 05, 2019 11:41 PM

ஓடும் ரயிலில் கதவருகில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து, செல்ஃபோனை பார்த்துக்கொண்டு வந்த இளைஞர், 4 பேர் கொண்ட கும்பலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

try to snatch the cell phone in chennai train 4 arrested

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் 26 வயதான ஷாந்தின் நடஸ்ஸா. இவர் தனது தாயார் உட்பட, நண்பர்களுடன் சென்னை வந்துவிட்டு, மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமையன்று, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து, ஜிடி எக்ஸ்பிரஸ் பொதுப் பெட்டியில் பயணம் செய்ததாகத் தெரிகிறது. கூட்டம் அதிகம் இருந்ததால், இளைஞர் ஷாந்தின் நடஸ்ஸா கதவோரம் உள்ள படியில் அமர்ந்து, செல்ஃபோனை பார்த்தபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

எண்ணூரை கடந்து, புது நகர் ரயில் நிலையத்தை நோக்கி, ரயில் சென்றபோது, ஒரு இடத்தில் ரயில் வேகம் சற்று குறைந்து சென்றுள்ளது. அந்த நேரம் கீழே நின்றிருந்த செல்போன் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர், ஷாந்தின் நடஸ்ஸாவின் செல்ஃபோனை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், செல்ஃபோனை விடாமல் பிடிக்க முயன்று, திடீரென ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் ரயில் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இளைஞர் ஷாந்தின் நடஸ்ஸா உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், கூச்சலிட்டு ரயிலை நிறுத்தினர்.

தனது மகன் இறந்ததைக் கண்டு அவரது தாயார் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். இளைஞர் ஷாந்தின் நடஸ்ஸாவின் உயிரிழப்புக்கு காரணமான கும்பல் தப்பியோடியது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், 16 வயது சிறுவன் உட்பட 4 பேரை  கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், ரயில் மெதுவாக செல்லும் இடங்களை தெரிந்துக்கொண்டு, தண்டவாளம் ஓரம் நின்றுக்கொண்டு, செயின், கைப்பை, செல்ஃபோன்களை பறிப்பது ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

Tags : #TRAIN #CHENNAI #THEFT #SNATCH