‘வீட்டு வாசலில்’... ‘இரவு நேரங்களில் இளைஞர் செய்யும் காரியத்தால்’... ‘அதிர்ந்து போயுள்ள குடியிருப்புவாசிகள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 13, 2019 10:50 PM
வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டுள்ள, இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் காணாமல் போகும் சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில், பணி முடிந்து வீட்டுக்கு வரும்போது, இரவு நேரத்தில் பெட்ரோல் நிரப்பி வந்தாலும், மறுநாள் காலை வாகனத்தை எடுக்கும்போது பெட்ரோல் குறைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டு வாசலில் நிறுத்திவைக்கப்படும், இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோல் மாயமாகி கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து பல வீடுகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, குடியிருப்புவாசிகள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், சீர்காழி புதியப் பேருந்து நிலையம் பின்புறம், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உள்ளே வரும் மர்ம இளைஞர் ஒருவர், யாராவது இருக்கிறார்களோ என நோட்டமிடுகிறார். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் 5 இருசக்கர வாகனங்களில், தான் கொண்டு வந்துள்ள பாட்டில்களில், அடுத்தடுத்து பெட்ரோலை திருடிச்செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது.
இதனைப் பார்த்து அதிர்ந்துப்போன குடியிருப்பு வாசிகள், பெட்ரோல் திருட்டு குறித்து, சிசிடிவி வீடியோ காட்சிகளுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
