‘20 வருஷமா ராணுவத்துல இருக்காரு’.. ‘அவருக்கு இப்டி ஆனதை யாராலையும் தாங்கிக்க முடியல’.. கதறியழுத குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 31, 2020 08:06 PM

காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN Armyman died in Kashmir relatives worried on coronavirus curfew

பட்டுக்கோட்டை அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். ராணுவ வீரரான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு பெண், ஆண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பணியாற்றி வந்த ராமசந்திரன் நேற்று மாரடைப்பால் உயிரிழ்ந்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த ராமசந்திரனின் உறவினர் செந்தில்குமார், ‘ராமச்சந்திரன் சுமார் 20 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி இடியாக வந்துள்ளது. எல்லோருடனும் அன்பாக பழகக்கூடியவர். எப்போது ஊருக்கு வந்தாலும் எல்லோரையும் பார்த்து நலம் விசாரிப்பார். ஊரில் நடந்த விஷயங்களையும் கேட்டு தெரிந்துகொள்வார். விவசாயத்தின் மீது அவருக்கு அதிக ஆர்வம் உண்டு.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் விடுமுறைக்காக ஊருக்கு வந்துவிட்டு பணிக்கு திரும்பினார். போகும்போது எல்லோரிடம், உடம்பை நல்லா பார்த்துக்கோங்க என அக்கறையுடன் கூறிவிட்டு சென்றார். எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர் இறந்ததாக வந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஊர்மக்கள் பலரும் தவித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளன. இந்த நிலையில் ராமச்சந்திரன் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளது’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

News Credits: Vikatan

Tags : #CORONA #CORONAVIRUS #INDIANARMY #CURFEW #DIED