'என் பிள்ளைங்க அவங்க 'அப்பா' முகத்த கடைசியா ஒருதடவ பார்க்க முடியலயே!'... துபாயில் மரணமடைந்த கணவர்!... கொரோனா எதிரொலியால்... இதயத்தை ரணமாக்கும் துயரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 30, 2020 08:47 PM

ஒரத்தநாடு அருகே இளம் பெண் ஒருவர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற தன் கணவர் திடீரென இறந்துவிட்டார் எனத் தகவல் வர `புள்ளைங்க நல்லா இருக்கணும் எனக் கூறி வெளியில் வேலைக்குப் போனீங்களே. ஒரு மாசம் சம்பளப் பணம் கூட வரலை அதுக்குள்ள நீங்க இறந்த சேதி வந்து விட்டதே' என அந்தப் பெண் தன் இரண்டு சின்ன குழந்தைகளுடன் கதறியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

orathanadu man dies in dubai and his family broke down in tears

ஒரத்தநாடு அருகே உள்ள புலவன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன்-ஷகிலா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு வயதில் தெய்வஸ்ரீ, 8 மாதம் ஆன கன்னிகாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் குடும்ப வறுமை காரணமாக துபாய் நாட்டிற்குக் கடந்த 7 மாதத்திற்கு முன்பு வேலைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி மாரடைப்பால் சரவணன் இறந்துவிட்டதாக துபாயிலிருந்து அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. இந்த செய்தியைக் கேட்ட ஷகிலா கதறித் துடித்துள்ளார்.

தன் அம்மா அழுவதைப் பார்த்த குழந்தைகளும் அழுதுள்ளனர். பெரும் துயரில் சிக்கித் தவித்த தாய்க்கும் அவர் குழந்தைகளுக்கும், எந்த விதமான ஆறுதல் வார்த்தைகளையும் கூறி அருகில் இருந்தவர்களால் இவர்களின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இந்நிலையில், உலகெங்கும் பரவி வரும் கொரோனா காரணமாக அவரது கணவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரமுடியாத சூழல் தான் சோகத்தின் உச்சமாக மாறி இருக்கிறது.

இதனால் அங்கேயே அடக்கம் செய்து விடலாமா என துபாயிலிருந்து தகவல் கேட்டுள்ளனர். ``இப்ப இருக்கிற சூழல் மற்றும் அந்தக் குடும்பத்தோட பொருளாதார நிலை என இரண்டுமே உடலை இங்கு கொண்டு வருவதற்கான சாத்தியமில்லை. எனவே, ஆகவே வேண்டிய காரியத்தைப் பாருங்க எனச் சொல்லிவிட்டோம். என்ன அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் அவர் அப்பா முகத்தைக் கடைசியாகப் பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என உறவினர்கள் தழுதழுத்தபடி கூறுகின்றனர்.

இது குறித்து சரவணன் மனைவி ஷகிலா கூறுகையில், ``என் கணவர் இங்கு கூலி வேலை பார்த்துக்கொண்டிருந்தார். போதுமான வருமானம் இல்லாததால் வறுமை வாட்டியது. முழுசா மூன்று வேலையும் சாப்பிடக் கூட முடியாதபடி வீட்டின் சூழல் இருந்த நிலையில் இரண்டாது குழந்தையும் பிறந்தது. இதையடுத்து `ஏற்கெனவே நமக்கு சொல்ல முடியாத கஷ்டம் இப்ப நம்மை நம்பி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு. நான் வெளிநாடு போய் வேலை பார்க்கிறேன். அப்பதான் பிள்ளைகளை கஷ்டப்படாம நல்லபடியா வளர்க்கலாம்' என்றார்.

நான், `சின்னவ இப்பதான் பிறந்திருக்கா. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் போகலாம்' என்றேன். `இல்ல அவ கொஞ்சம் வளர்ந்து சிரித்து விளையாடத் தொடங்கிட்டா போறதுக்கு மனசு வராது' எனக் கூறி போறதுக்கான ஏற்பாட்டை செஞ்சார்.

இதற்காக ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி விசா எடுத்து துபாய்க்குச் சென்றார். போய் ஏழு மாசம்தான் இருக்கும் இன்னும் ஒரு மாதச் சம்பளப் பணம் கூட வந்து சேரலை. ஆனால் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருத்தர் மூலம் அவர் இறந்த செய்திதான் வந்தது. இதைக் கேட்ட என் ஈரக்குலை ஒரு நிமிஷம் நின்றுவிட்டது.

இந்தச் சின்ன பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைச்சாதான் எனக்கு ஒரே பயமாக இருக்கு. அவர் உடலை கொண்டு வந்து கடைசியா அவர் முகத்தைப் பார்க்கக் கூட முடியாத பாவியாய் நான் ஆகிட்டேன். அதை நினைத்து அழுவதா, இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அழுவதா எனத் தெரியவில்லை. என்னோட இந்தத் துயரமான நேரத்தில் என நிலையை மாற்றுவதற்கும், எனக்கு உதவவும் யாரும் வர மாட்டார்களா என் மனசு கிடந்து தவிக்கிறது" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

Tags : #CORONA #CORONAVIRUS #FAMILY #HUSBAND #CHILDREN #WIFE