'சென்னையில் 15 நாட்களுக்கு நீர் விநியோகம் பாதிப்பு!'... உப்பு நீக்கும் ஆலை மூடப்படுவதால்... அவசர தொலைபேசி எண்களை வெளியிட்டு... சென்னை மாநகராட்சி அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெம்மெலி உப்பு நீக்கும் ஆலை மூடப்படும் என்பதால் சென்னையின் சில பகுதிகளில் 15 நாட்களுக்கு நீர் விநியோகம் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 உப்பு நீக்கும் ஆலைகள் உள்ள நிலையில், அவை நகரத்திற்கு 180 எம்.எல்.டி வரை தண்ணீர் வழங்கி வருகின்றன. இந்நிலையில், நெம்மேலி உப்பு நீக்கும் ஆலை மூடப்படும் என்பதால் சென்னையின் சில பகுதிகளில் 15 நாட்களுக்கு (மார்ச் 17 முதல், ஏப்ரல் 1 வரை) நீர் விநியோகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தண்ணீரில் இருந்து சிறு சிறு துகள்களை வடிகட்ட TBS பயன்படுத்தப்படுகிறது. இந்த TBS-ஐ (டிராவலிங் பேண்ட் ஸ்கிரீன்) சரிசெய்வதற்காக ஒரு நாளுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட உப்பு நீக்கும் ஆலை மார்ச் 17 காலை 6 மணி முதல் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும்.
இதனால், தென் சென்னைப் பகுதிகளான திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், மைலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், இஞ்சம்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் 15 நாட்களுக்கு பாதிக்கப்படும். நீர் விநியோகம் நிறுத்தப்பட்ட காலகட்டத்தில் மேற்கண்ட அனைத்து பகுதிகளுக்கும் நீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்தவும், போதுமான அளவு தண்ணீரை முன்னதாகவே சேமிக்கவும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக டேங்கர்களில் தண்ணீர் வழங்குவதற்காக பொதுமக்கள் பின்வரும் பகுதி பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்:
மைலாப்பூர் மற்றும் மந்தைவெளி: 8144930909
அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர்: 8144930913
கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி: 8144930914
இஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர்: 8144930915
