'கைய நல்லா கழுவ சொல்றீங்க'... 'சென்னையில தண்ணீருக்கு எங்க போவோம்'?... ஐகோர்ட்டில் வழக்கு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 13, 2020 11:09 AM

கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டி இருப்பதால், சென்னை நகர மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் விநியோகிக்க வேண்டி சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Chennai people demand adequate water for washing hands due to Corona

கொரோனாவின் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையத்தில் அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதையடுத்து மக்கள், தங்கள் கைகளைக் கழுவுவதற்குத் தேவையான தண்ணீரை வினியோகிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ''சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்குத் தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்து வருகிறது.

எனேவ  கொரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்யக் குடிநீர் வாரியம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும்  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான தண்ணீரை விநியோகிக்கச் செய்வதுடன், கைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் திரவங்களையும் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : #MADRASHIGHCOURT #CHENNAI #CORONAVIRUS #WATER #WASHING HANDS