"தமிழகத்தில் தற்போதுள்ள சிஷ்டம் தொடர்ந்தால்..." "அது மீன்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்த மாதிரி இருக்கும்..." நடிகர் ரஜினிகாந்த் 'நச்' பஞ்ச்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிகத்தில் தற்போதுள்ள சிஷ்டத்தை மாற்றாவிட்டால் அது மீன்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்தது போன்று இருக்கும் என ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியலில் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து பேசினார்.
அப்போது, தமிழகத்தில் தற்போதுள்ள சிஷ்டத்தை மாற்ற வேண்டும் என்றும், சுயநல அரசியலை விடுத்து அரசியல் மாற்றத்திற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
பொதுவாக ஒரு அரசியல் கட்சியின் தலைவரே முதலமைச்சர் வேட்பாளராகவும் இருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார். கட்சித் தலைமை என்பது ஒரு எதிர்க்கட்சியைப் போன்று செயல்பட வேண்டும் என்றும், முதலமைச்சராக இருப்பவர் ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ. போன்று செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கட்சி சார்பில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
அப்படி இருந்தால் மட்டுமே தமிழக்ததில் சிஷ்டம் மாறி ஊழல் அற்ற நிர்வாகம் அமையும் என்றும் கூறினார்.
மேலும் ஒரு கட்சி என்றாலே. 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்ற நிலைமை மாற்றப்பட்டு, தமது கட்சியில் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனக் குறிப்பிட்ட ரஜினிகாந்த், தமது கட்சியில் 65 சதவிகிதம் இளைஞர்களுக்கே இடமளிக்க உள்ளதாக கூறினார். கட்சியின் தலைவரே முதலமைச்சராகவும் அவருக்கு வேண்டியவர்களே மற்ற உயர் பதவிகளுக்கும் வரும் சிஷ்டம் இனி நம்மிடம் இருக்கப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நேர்மையானவர்களையும், எதிர்காலம் குறித்த தெளிவான திட்டங்கள் உடையவர்களையும் அவர்களது வீட்டுக்கே சென்று பேசி கட்சிக்கு அழைக்கப்போவதாகவும் ரஜினிகாந்த தெரிவித்தார்.
இந்த மாற்றங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு, நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழகத்தின் சிஷ்டம் மாறும் என்றும், அது அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
