'பால்காரன்' எனது முகத்தில் 'மயக்கமருந்து' தெளித்து... 'காரில்' கடத்திச் சென்று... 'யெய்யாடி!...' எவ்ளோ பெரிய 'ஸ்கிரிப்ட்'... மொத்த போலீசுக்கும் 'விபூதி' அடிக்க பார்த்த '+2 மாணவி'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 10, 2020 01:30 PM

பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய பெங்களூரு மாணவியை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

A Bangalore student who plays a kidnapping police in Chennai

சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்திற்கு காலில் செருப்பு கூட இல்லாமல் பள்ளி மாணவி ஒருவர் பதற்றத்துடன் ஓடிவந்தார். போலீசார் அவருக்கு தண்ணீர் கொடுத்து அமர வைத்து பதற்றம் தணிந்த பின் என்ன நடந்தது என விசாரித்தனர்.

அதில் அவர், பெங்களூரு சஞ்சய் நகர் 2-வது ஸ்டேஜ் 16-வது தெருவைச் சேர்ந்த 18 வயது மாணவி என்பதும், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதும் தெரிந்தது.

மேலும் அவரது தந்தை பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாகவும், தன்னை தனது வீட்டுக்கு பால் பாக்கெட் கொண்டு வந்த நபர் ஒருவர், தனது நண்பருடன் சேர்ந்து முகத்தில் மயக்க மருந்து தெளித்து, காரில் கடத்திச் சென்றதாகவும் பதற்றத்துடன் கூறினார்.

சென்னை வரை காரில் கடத்தி வந்த அவரை மற்றொரு காருக்கு மாற்றியபோது அவர்களிடமிருந்து தப்பி வந்து விட்டதாகவும் கூறியுள்ளார். தனது தந்தையிடம் பணம் பறிக்கவே மர்மநபர்கள் தன்னை பெங்களூருவில் இருந்து சென்னை கடத்தி வந்ததாகவும் புகார் தெரிவித்தார்.

போலீசார் அவரை காரில் கூட்டிச் சென்று எங்கு கடத்தல்காரர்களிடமிருந்து தப்பினாய்?, எந்த வழியாக ஓடிவந்தாய்?, என கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளனர். அவற்றிற்கு முன்னுக்கு பின் முரணாக அந்த மாணவி பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் அந்த மாணவி, பெங்களூருவில் இருந்து லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நடந்தே சிறிது தூரம் வந்து, அதன் பிறகு காலில் இருந்த செருப்பை கழற்றி வீசிவிட்டு அங்கிருந்து பதற்றமாக மூச்சுத்திணற போலீஸ் நிலையம் ஓடி வந்தது தெரிந்தது.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கடத்தல் நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அதன்பின் நடத்திய விசாரணையில், பிளஸ்-2 வேதியியல் பாடத்தில் சரிவர படிக்காததால் தேர்வுக்கு பயந்து சென்னைக்கு ஓடி வந்து, காரில் கடத்தியதாக நாடகமாடி, போலீசாரை அலைக்கழித்தது தெரிந்தது.

பூக்கடை அனைத்து மகளிர் போலீசார், மாணவிக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags : #CHENNAI #POOKKADAI #POLICE STATION #BANGALURU #+2 STUDENT