விபத்தில் ‘இறந்துவிட்டார்’ என நினைத்தபோது... ‘காவலர்’ செய்த காரியத்தால் ‘நிமிடங்களில்’ நடந்த அதிசயம்.. வைரலாகப் பரவும் வீடியோ..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 12, 2019 01:54 PM

விபத்தில் சிக்கி அசைவற்றுக் கிடக்கும் முதியவரை காவலர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.

Viral Video Trichy Police Save Mans Life After Car Bike Accident

திருச்சி மாவட்டம் பிராட்டியூரைச் சேர்ந்த அப்துல்காதர் (65) என்பவர் கடந்த மாதம் 6ஆம் தேதி தனது மனைவி மற்றும் பேரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். வண்ணாங்கோவில் அருகே போய்க்கொண்டிருந்தபோது கார் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படாத நிலையில் அப்துல் காதர் மட்டும் சுயநினைவின்றி அசைவற்று கிடந்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர் இறந்துவிட்டார் என நினைக்க, அந்த வழியாக வந்த காவலர் பிரபு உடனடியாக வந்து அவருக்கு உதவியுள்ளார். அசைவற்று கிடந்த அப்துல் காதரின் மார்பில் கை வைத்து பலமுறை அழுத்திய காவலர் பிரபு, வாய் வழியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் அப்துல் காதர் மீண்டும் கண் விழித்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகப் பரவி வருகிறது.

இதுகுறித்துப் பேசியுள்ள காவலர் பிரபு, “சம்பவத்தன்று அப்துல்காதர் அசைவற்று கிடந்ததால் அனைவரும் அவர் இறந்துவிட்டார் என நினைத்தார்கள். ஆனால் அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து காவலர் பயிற்சி மற்றும் பேரிடர் மீட்புப் படை பயிற்சியின்போது சொல்லிக்கொடுத்ததை வைத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளித்தேன்.

அவருக்கு தொடர்ந்து 3 நிமிடங்கள் செயற்கை சுவாசம் அளித்ததில், அவர் மூச்சுவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினார். இப்படி செய்வதன்மூலம் 70 சதவிகிதம் உயிரைக் காப்பாற்றிவிடலாம். இதுபோல பலமுறை செய்துள்ளேன். ஒரு மாதத்திற்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவுவதால் பலரும் அழைத்துப் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #POLICE #ACCIDENT #TRICHY #MAN #SAVE #VIRAL #VIDEO