'ஆற்றுக்கு நடுவே ஆபத்தான பாலம்'.. '60 பயணிகளைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 25, 2019 12:25 PM

திருச்சி லால்குடியை அடுத்த பூவாளூரைச் சேர்ந்தவர் பேருந்து இயக்குநர் திருக்குமரன். இவருக்கு 3 பெண் குழந்தைகள், ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்குச் செல்வதாக மனைவியிடம் சொல்லிவிட்டு வந்தவர், திண்ணியம் கிராமத்தில் இருந்து லால்குடி வழியே திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.

TN Govt Bus Driver Saved 60 passengers before he died

ஆனால் திருச்சி சுற்று வட்டாரங்களில் பெய்த மழையால் திருச்சி மலைக்கோட்டையே வெள்ளத்தில் தத்தளித்தாலும், தீபாவளி பண்டிகை என்பதால், பலரும் திருச்சிக்கு வந்து செல்கின்றனர். இதனால் அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழிகின்றனர். அப்படித்தான் திருக்குமரனின் பேருந்திலும் கூட்டம் இருந்துள்ளது. அந்த பெரும் கூட்டத்தை ஏற்றிக்கொண்டு சிறுமையம்குடி அருகே உள்ள ஆற்றுப் பாலத்தை கடக்க வேண்டும்.

அதுவும் சாதாரண ஆற்றுப்பாலம் அல்ல, இரு பக்கமும் ஆறுகள் ஓடும் அந்த பாலத்தை, வெள்ள அபாயம் இருக்கும் சூழலில் பாதுகாப்பாக கடக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் ஆபத்து என்பதற்கு இதற்கு முன் அங்கு நடந்த விபத்து சம்பவங்களே உதாரணம். ஆனால் திருக்குமரனோ, 60 பயணிகளின் வாழ்க்கைக்காக உயிரை பணையவைத்திருக்கிறார். ஆம், ஆற்றுப்பாலத்தைக் கடக்கும்போதே அவருக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறது.

எனினும் அவர் முயற்சி செய்து, ஆற்றைக் கடந்து, பின் பேருந்தை ஓரமாக நிறுத்தி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தண்ணீர் கேட்டிருக்கிறார். தண்ணீர் கொடுத்த பின்பு, அவர் ஸ்டியரிங்கிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே பயணிகளும் நடத்துநரும் இணைந்து அவரை சிறுகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் லால்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்லச் சொல்லி அவர்கள் பரிந்துரைத்தனர்.

ஆனால் அந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே திருக்குமரன் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவி, மக்கள், உறவினர், பணிமனை கிளை மேலாளர் உள்ளிட்டோர் கதறியபடி ஓடி வந்துள்ளனர். அவரது மகள்கள்,  ‘அத்தனை பேரையும் காப்பாத்துனீங்களே அப்பா.. எங்களை விட்டுட்டுங்களே!’ என்று நெஞ்சமுருகி அழுதுள்ளனர்.

Tags : #BUS #DRIVER #DEAD