‘கண் இமைக்கும் நேரத்தில்’.. ‘எங்கிருந்தோ பறந்து வந்து’.. ‘காரைத் துளைத்த கல்லால் நடந்த பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 15, 2019 07:44 PM
போபாலில் காரின் மீது வந்து விழந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் அசோக் வெர்மா (42). வங்கியில் மேனேஜராக வேலை செய்து வரும் இவர் உடன் பணிபுரியும் 2 பேருடன் தனது மாருதி 800 காரில் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென எங்கிருந்தோ வந்த கல் ஒன்று அவருடைய காரின் மேல்பகுதியைத் துளைத்து காரை ஓட்டிக்கொண்டிருந்த அசோக் வெர்மாவைத் தாக்கியுள்ளது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் பயணித்த இருவரும் காயம் எதுவும் இன்றி தப்பித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசோக் வெர்மாவை தாக்கிய கல் 1.5 கிலோ எடையுடன் இருந்ததாகவும், அது அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல் உடைக்கும் பகுதியிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 11 ஆண்டுகளாக அப்பகுதியில் கல் உடைக்கும் வேலை நடந்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை என அப்பகுதியினர் கூறியுள்ளனர்.