'எனக்கு தர மாட்டீன்னா.. நீ இருக்கவே வேணாம்'.. அக்காவுக்கு தம்பி கொடுத்த கொடூர தண்டனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Aug 13, 2019 04:55 PM
சென்னை புழல் அருகே உள்ள புதிய லட்சுமிபுரத்தைச் சேர்ந்த 53 வயதான மல்லிகா என்பவருக்கு ஜெயா, லட்சுமி, சாந்தி என 3 தங்கைகளும், நந்தக்குமார் என்கிற தம்பியும் உள்ளனர். ஆனால் மல்லிகா திருவள்ளூரில் உள்ள தனது மகள்களுடன் வசித்து வந்த நிலையில், அவரது மகன் சங்கர் புழலில் குடியிருக்கிறார்.

இந்த சூழலில் புழலில் உள்ள தன் மகனைக் காண வந்த மல்லிகாவுடன், அவரது சகோதரர் நந்தகுமார், கடுமையாக சண்டை போட்டுள்ளார். ஆனால் சண்டையில் இருந்து விலகி மல்லிகா, மீண்டும் தன் மகள்களின் வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்றபோது, அவரின் பின்னாலேயே வந்த நந்தகுமார் அவரை தலையின் பின்னால் மண்வெட்டியால் தாக்கி கொன்றார்.
அதன் பின்னர் தப்பியோட முயன்ற நந்தகுமார், பொதுமக்களால் பிடிக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சொந்த அக்காவை, அதுவும் குடும்பத்தின் மூத்த அக்காவை, ஒரு தம்பி கொல்வதற்கான காரணமாக என்னவாக இருக்கும் என்று போலீஸார் தங்கள் விசாரணையைத் தொடங்கினர்.
ஆனால் விசாரணையில், நீண்ட காலமாக, சம்பாதிக்க செல்லாமல், குடித்துவிட்டு இருந்துள்ள நந்தகுமார் தன் மூத்த அக்கா மல்லிகாவிடம் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை கேட்டதாகவும், அக்கா தரமறுத்ததால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்ததாகவும், இவ்வாறான சண்டை அடிக்கடி வரும் என்றும் இம்முறை ஆத்திரத்தில் அக்காவைக் கொன்றதாகவும் நந்தகுமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
