'இதுக்கா 10 வருஷம் காத்திருந்தேன்'...'கர்பமடைந்த காதலி'... 'நம்பி போன பொண்ணுக்கு தம்பி செய்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 06, 2019 11:37 AM

10 ஆண்டுகளுக்கு முன் செவிலியர் மாயமான வழக்கில், அவர் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.

Woman missing case turns out to be murder for gain

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த சண்முகம் - ஜீவா தம்பதியின் மூத்த மகள் சுதா. இவர் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2007ம் ஆண்டு ராஜ்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே சுதா பணிக்கு செல்லும் போது, அவருடைய சகோதரர் உறவு முறை இளைஞரான யோகேஸ்வரன் என்பவர் அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2009 நவம்பர் 29ஆம் தேதி இரவுப் பணிக்குச் செல்வதாக புறப்பட்ட சுதா மறுநாள் காலை வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறி போன அவரது குடும்பத்தார், பல இடங்களில் சுதாவை தேடி பார்த்தார்கள்.

இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகாரை காவல்துறையினர் சரிவர விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் சுதாவின் கணவர் ராஜ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் அவர், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், ராஜ்குமார் வழக்கில் தீவிரம் காட்டவில்லை. இதனால் சுதாவின் தந்தை சண்முகம், தமது மகள் மாயமான வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், மத்திய மண்டல ஐஜி, டிஐஜி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது உத்தரவின் பேரில், சுதா காணாமல் போன வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக சுதாவை வழக்கமாக பைக்கில் அழைத்து செல்லும் யோகேஸ்வரனை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. காவல்துறையினரிடம் யோகேஸ்வரன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது '' நானும் ஒரு பெண்ணும் காதலித்து வந்தோம். அவ்வப்போது நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து கொள்வது வழக்கம்.

இந்த சூழ்நிலையில் எனது காதலி கர்பமடைந்தாள். இதனால் அவளது கர்பத்தை கலைக்க  சுதாவிடம் பணம் மற்றும் நகையைக் கேட்டேன். ஆனால் அவர் கொடுக்காத நிலையில், வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என கூறி சுதாவை காரில் அழைத்து சென்று கொலை செய்ததாக'' யோகேஸ்வரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளார்கள்.

இந்நிலையில் சுதாவை கொலை செய்ய அவரது உறவுக்காரரான ரெங்கராஜையும் சேர்த்துக் கொண்டதாக கூற அவரையும் போலீசார் கைது செய்தனர். சுதாவைக் காரில் ஏற்றிச் சென்று கொத்தம்பட்டி பாலம் அருகே கொண்டு சென்றதாகவும் அங்கு வைத்து துப்பட்டாவால் சுதாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் சுதாவின் 9 சவரன் நகைகளை கழற்றியதாகவும், காது மற்றும் மூக்கில் இருந்த அணிகலன்களை கழற்ற முடியாமல், பிளேடால் அறுத்ததாக அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்கள். அதன் பின்பு சுதாவின் உடலை நாமக்கல் அருகே தத்தாத்திரிபுரம் புதருக்குள் வீசியதாகவும், அவர் உயிருடன் இருக்கலாம் எனக் கருதி முகத்தில் பாறாங்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததாக அதிரும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்கள்.

இதனிடையே சுதா கொடூரமாக கொலை செய்யப்பட்ட தகவல் அவரது பெற்றோர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த கொடூரத்தை கேட்கவா 10 வருடம் காத்திருந்தேன் என அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே இருவரையும் கைது செய்த துறையூர் தனிப்படை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags : #MURDER #TRICHY #WOMAN MISSING CASE