'அக்கா, சாப்டாச்சா வாங்க'... 'வீட்டு வாசலில் ரிலாக்ஸா உட்கார்ந்திருந்த பெண்கள்'... 'ஒரு செகண்ட்ல ஐயோ காப்பாத்துங்கன்னு கேட்ட கதறல்'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தலைக்கேறிய போதை எந்த அளவிற்கு மனிதர்களின் உயிரோடு விளையாடுகிறது என்பதற்குப் பெரிய சான்றாக அமைந்துள்ளது, இந்த கோரச் சம்பவம்.

தேனி மாவட்டம் அரண்மனை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லோக கிருஷ்ணன். இவர் உணவகம் நடத்தி வரும் நிலையில், நேற்றிரவு மது அருந்தியுள்ளார். அதோடு தனது நண்பனைப் பார்க்க மது போதையில் காரில் சென்றுள்ளார். நண்பனைப் பார்த்து விட்டுத் திரும்பிய கிருஷ்ணன், தலைக்கேறிய மது போதையில் இருந்ததால், வண்டியைத் தாறுமாறாக ஓட்டியுள்ளார். அவர் வந்து கொண்டிருந்த பகுதி கிராமப்புறம் என்பதால், பெண்கள் இரவு உணவைச் சாப்பிட்டு விட்டு வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார்கள்.
அப்போது அதிவேகமாக வந்த கிருஷ்ணன், கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பெண்கள் மீது மோதினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் சிக்கிய பெண்கள் காரின் அடியில் சிக்கிக் கொண்டு கதறினார்கள். பெண்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், காரின் அடியில் சிக்கியிருந்த பெண்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.
அப்போது ஜெயமணி என்ற பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், லோக கிருஷ்ணனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமைதியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்கள் மீது குடிபோதையில் காரை ஏற்றிய சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
