சென்னையில் ‘அசுரவேகத்தில்’ வந்த கார் மோதி தூக்கிவீசப்பட்ட நபர்.. 2 கிமீ காரின் மேற்பகுதிலேயே தூக்கிச்சென்ற கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பைக் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட நபர், காரின் மேற்பகுதியிலேயே 2 கிமீ வரை சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் ரஞ்சித். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் தனது இருசக்கர வாகனத்தில் வானகரம் சாலை வழியாக சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் ஒன்று ரஞ்சித்தின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட ரஞ்சித், விபத்தை ஏற்படுத்திய காரின் மேற்பகுதியிலேயே விழுந்துள்ளார்.
ரஞ்சித் காரின் மேலே இருக்கிறார் என்பது தெரியாமல், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிக்க முயன்று காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே காரை துரத்தி சென்றனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்ற காரை மடக்கிய போலீசார், காரின் மேற்கூரையில் இருந்த ரஞ்சித்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனை அடுத்து காரை ஓட்டி வந்த கணேசமூர்த்தி என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இவர் திருமழிசை காய்கறி சந்தையில் தக்காளி வியாபரம் செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ரஞ்சித்துக்கு காலில் முறிவு ஏற்பட்டு, கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
