"வெட்டுக்கிளிகள் உருவாக்கப்பட்டதா? உருவானதா?..." 'கோடிக்கணக்கில்' உருவாவதன் 'அறிவியல் பிண்ணனி என்ன?'
முகப்பு > செய்திகள் > உலகம்கோடிக்கணக்கில் படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் எப்படி உருவாகின்றன என்பது குறித்து தகவல்களை உயிரியல் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது.
பொதுவாகத் தனித்தனியாகக் குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன.
அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்போதுதான் அவை ஆபத்தான அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.
உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன்பெற்றவை என்ற தகவலை National Geographic பதிவு செய்துள்ளது.
பொதுவாக இப்படி படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள்,
ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணித்து ராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம்.
ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதைக் கவனிக்கும் போது, இதன் போக்கை நிர்ணயிக்க முடியாது என்றே உயிரியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மற்ற செய்திகள்
