குழந்தைக்கு தடுப்பூசி போட்ட செவிலியர்... டாக்டரை ஆலோசிக்காததால் நேர்ந்த விபரீதம்... கதறித் துடித்த பெற்றோர்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆரணி அருகே தடுப்பூசி போடப்பட்ட குழந்தை திடீரென இறந்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி அருகே உள்ள விளை கிராமத்தை சேர்ந்த சிரஞ்சீவி, தமிழரசி தம்பதியினருக்கு லித்தேஷ் என்ற 5 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நெசல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புதுப்பட்டு கிராமத்தில் மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் தமிழரசி அவரது குழந்தைக்கு தடுப்பூசி போட கொண்டு சென்றார்.
குழந்தைக்கு சளி இருந்த நிலையில் அதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசிக்காமல் செவிலியர் தடுப்பூசி போட்டுள்ளார். அதன் பிறகு குழந்தை சோர்வாக இருந்துள்ளது. இரவு குழந்தை அழுதுள்ளது. அதற்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்துள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் குழந்தை அசைவில்லாமல் இருந்ததைக் கண்டு பதறிய பெற்றோர் குழந்தையை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நெசல் ஆரம்ப சுகாதாரநிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.