'குழந்தைகள் விற்பனை வழக்கில்... திடீர் திருப்பம்... போலீஸார் தீவிர விசாரணை!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்களைக் கைது செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் ஒரு தம்பதியினர், ஆண் குழந்தை ஒன்றை விலைக்கு வாங்கி வளர்த்து வருவதாகவும், இன்னொரு தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தையை வேறொருவருக்கு விற்றதாகவும் திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காவல்துறையும் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர். அதன் விளைவாக, சம்பந்தப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகள் வாங்க, விற்க புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் யார்? குழந்தைகளை விற்றது எப்படி? என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், 'குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். முழு விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விசாரணையில் உள்ள நபர்களின் விவரங்கள் தற்போது தெரிவிக்க இயலாது. நாளை (அதாவது இன்று) முழு விவரம் தெரிவிக்கப்படும்' என்றார்.
மேலும், குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் போலீஸாரின் பிடியில் 2 பேர் இருப்பதாகவும், அவர்கள் புரோக்கர்கள் எனவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
