‘மகளை காப்பாத்தணும்’!.. ‘ஆனா நீச்சல் தெரியாது’!.. ‘கதறி அழுத பக்கத்துவீட்டு பெண்’.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 06, 2020 10:30 AM

தென்காசி அருகே குளத்தில் குளிக்க சென்றபோது ஆழமான பகுதியில் மூழ்கி தாய், மகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tenkasi mother and daughter including 3 women drowned in pond

தென்காசி மாவட்டம் பனையூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அழகு. இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு 11 வயதில் சுமித்திரா என்ற மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக மகள் சுமித்திராவுடன் இந்திரா சென்றுள்ளார். அவர்களுடன் பக்கத்துவீட்டு பெண் செல்வியும் (28) சென்றுள்ளார்.

மூவரும் குளத்தில் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது சிறுமி சுமித்திரா எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமாக பகுதியில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் இந்திரா, மகளை காப்பாற்றுவதற்காக குளத்தில் குதித்துள்ளார். ஆனால் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளனர்.

இதனைப் பார்த்து கதறி அழுத செல்வி, அருகில் வயல்வெளியில் வேலைப் பார்த்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வருவதற்குள் உணர்ச்சிவசப்பட்டு செல்வியும் குளத்தில் குதித்துள்ளார். ஆனால் அவருக்கும் நீச்சல் சரிவரத் தெரியாததால் மூவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த தாய், மகள் உட்பட மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KILLED #TENKASI #MOTHER #DAUGHTER #POND