VIDEO: 'பண்டிகையக் கொண்டாடுங்கடே!'... 'கோலாகலமாகத் தொடங்கிய தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு'... 'பிரம்மிக்க வைக்கும் சிறப்பம்சங்கள்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில், இன்று குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு, தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இன்று, பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகின்ற குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 1ம் தேதி முதல், யாக சாலை பூஜைகள் தஞ்சை பெருவுடையார் கோவிலில் நடைபெற்றுவருகின்றன. அவ்வப்போது, பூஜைகளின் இடையே இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், குடமுழுக்கையொட்டி தஞ்சை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது. அதன் நீட்சியாக, தஞ்சாவூர் 16 மண்டலமாக பிரிக்கப்பட்டு, அதில் 4 ஆயிரத்து 492 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 17 காவல் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கோயில் முழுவதும் 32 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, நகரம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செம்மைப்படுத்தி வருகிறது. பக்தர்கள் அனைவரையும் பல கட்ட சோதனைக்குப் பின்பே, கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். முக்கிய சிறப்பம்சமாக, மாற்றுத்திறனாளிகளை கோயிலுக்குள் அழைத்துச் செல்வது உள்பட பல்வேறு பணிகளில் 1,500 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மருத்துவ வசதிகளைப் பொறுத்தமட்டில், 25 சிறப்பு மருத்துவமனைகளுடன், 13 ஆம்புலன்ஸ்கள், 10 இருசக்கர அவசர ஊர்திகள், தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 225 இடங்களில் குடிநீர் குழாயும், நகரம் முழுவதும் 238 கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 2,500 துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். குப்பைகளைப் போட 800 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரை, தஞ்சை நகரில் அமைக்கப்பட்டுள்ள 21 தற்லாலிக பேருந்து நிலையங்களில் இருந்து கோயிலுக்கு 175 இலவச பேருந்துகளும், கோயிலை சுற்றி 30 பேட்டரி வாகனங்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு 1,426 பேருந்து சேவைகளுக்கும், தஞ்சையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 7 வழித்தடங்களில் 1,649 பேருந்து சேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து தஞ்சைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிப்ரவரி 4,5,6 ஆகிய தேதிகளில் திருச்சி-தஞ்சை ரயில் தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறை-தஞ்சை வழித்தடத்திலும் சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
