நியூ இயர் பிறக்கும் நள்ளிரவில்... சென்னையில் மெட்ரோ ரயில்... எவ்வளவு நேரம் இயங்கும்?... எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றங்கள்?... பைக் ரேஸை தடுக்க மூடப்படும் 75 மேம்பாலங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 31, 2019 09:01 AM
இன்று புத்தாண்டு பிறப்பதையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்களும் நடைபெறும். அப்போது, மக்களுக்கு வசதியாக, அதே சமயத்தில் பாதுகாப்பு கருதி சென்னையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடப்படுவதால், சாலைகளில் மக்களின் நடமாட்டம் இருக்கும். இதனால், பயணிகளுக்கு வசதியாக, மெட்ரோ ரயில் சேவை, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படுகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது வழக்கம். இதனை தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள 75 மேம்பாலங்களும் இரவு நேரத்தில் மூடப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.
மேலும் மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் புத்தாண்டு வரவைக் கொண்டாடுவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு, காமராஜர் சாலை மற்றும் பெசன்ட் நகர் சாலையில் ஆயிரகணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள். அப்போது விபத்தில்லா புத்தாண்டை உறுதிசெய்ய வேண்டும் என்பதில் காவல்துறை உறுதியாக உள்ளது. இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி
1. மெரீனா கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் இன்று இரவு 8 மணி முதல் சாலை தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு வாகனங்கள் கடற்கரை உட்புறச்சாலையில் நுழையாமல் தடைசெய்யப்படும். அதன் பிறகு கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் வழியாக மட்டுமே வெளியேற்றப்படும்.
2. காமராஜா் சாலையில் காந்தி சிலை முதல் போா் நினைவு சின்னம் வரையில் இன்று இரவு 8 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
3. காமராஜா் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்திநகா், சுங்குவாா்தெரு, பாரதிசாலை, வாலாஜாசாலை, சுவாமி சிவானந்தாசாலை ஆகிய சந்திப்புகளில் சாலை தடுப்புகள் கொண்டு வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும்.
4. ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பிலிருந்து போா்நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள், இன்று இரவு 8 மணி முதல் என்.எஸ்.சி.போஸ் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக திருப்பிவிடப்படும். அதேபோல, அடையாறில் இருந்து வாகனங்கள் கச்சேரி சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பு, கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மியூசிக் அகாடெமி வழியாக அண்ணா சாலை செல்லலாம்.
5. டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்துச் சாலை, போா்நினைவு சின்னம் ஆகியவற்றிலிருந்து வரும் வாகனங்களை காமராஜா் சாலைக்கு இன்று இரவு 8 மணி முதல் அனுமதிக்கப்படமாட்டாது.
6. ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை ஒருபுறம், சேப்பாக்கம் ரயில்வே நிலைய வாகனம் நிறுத்துமிடம், லாயிட்ஸ் சாலை ரயில்வே நிலைய வாகன நிறுத்துமிடம், டாக்டா் பெசன்ட் சாலையில் ஒரு புறம், லாயிட்ஸ் சாலை ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.
7. பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6-வது அவென்யூவில் இன்று இரவு 8 மணி முதல் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. புதன்கிழமை அதிகாலை 4 மணி வரை இந்த நிலை நீடிக்கும்.
8. பெசன்ட் நகா் 6-வது அவென்யூ இணைப்பு சாலைகளான 5-வது அவென்யூ, 4-வது பிரதான சாலை, 3-வது பிரதான சாலை, 16-வது குறுக்குதெரு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். மகாத்மாகாந்தி சாலை, 7-வது அவென்யூ சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
9. பெசன்ட்நகா் 4-வது அவென்யூவின் ஒரு பகுதி, 3-வது பிரதான சாலையின் ஒரு புறம், 4-வது பிரதான சாலை ஒருபுறம்,5-வது அவென்யூ ஒரு புறம், 2-வது அவென்யூ ஒரு புறம், 3-வது அவென்யூ ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களில் நிறுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10. சென்னை முழுவதும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இன்று இரவு 9 மணியில் இருந்து சென்னையில் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
