'தமிழகத்தில் ஜுன் 1 முதல் பத்தாம் வகுப்பு பொது தேர்வு...' 'தேர்வு கால அட்டவணையும் வெளியானது...' முழு விவரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொது தேர்வு தேதியை வெளியிட்டார் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

இந்தியாவில் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொது தேர்வுகள் என அனைத்து அம்சங்களும் நிறுத்தி வைக்கப்பட்டது. 12-ம் வகுப்பிற்கான பொது தேர்வு மட்டும் நடத்தி முடிக்கப்பட்டிருந்த நிலையில் 10-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
எந்த காரணம் கொண்டும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும், தற்போதுள்ள சூழலில் ஒத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்பே தமிழக முதல்வரும், கல்வி அமைச்சரும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜூன் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
ஜூன் 1-ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது 12ந் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்து, தேர்வு கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளனர்.
ஜூன் 1 ஆம் தேதி திங்கள்கிழமை காலை மொழி பாடமும், ஜூன் 3 ஆம் தேதி புதன் காலை ஆங்கிலமும், ஜூன் 5 ஆம் தேதி வெள்ளி காலை கணிதமும், ஜூன் 6 ஆம் தேதி சனிக்கிழமை காலை Optional Language-யும், ஜூன் 8 ஆம் தேதி திங்கள் காலை அறிவியலும், ஜூன் 10 ஆம் தேதி புதன்கிழமை காலை சமூக அறிவியலும், ஜூன் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை Vocational தேர்வும் நடைபெறும் என ஆணை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்விற்கு மூன்று மணி நேரம் கால அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வை எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு ஜூலை 4-ல் மறு தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பின் தேர்வு ஜூன் 2-ல் முதல் தொடங்கும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்வுகள் நடைபெறும் போது மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் எனவும், தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
ஆனால் பள்ளிகள் திறப்பு பற்றிய எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
