'போதையில் வண்டி ஓட்டும் பெண்கள்'...'தமிழகத்திலேயே முதல் முறையாக'...சென்னை போலீஸ் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 19, 2019 10:47 AM

தமிழகத்தில் முதல்முறையாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க சென்னையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

Women Police Squad formed in Chennai to track drunk women drivers

சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்ற பிறகு சென்னை மக்களின் பாதுகாப்பிற்காக பல அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதில் முக்கியமாக மூன்றாவது கண் என்று மாநகர் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தார். இதன் மூலம் பல குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டன. மேலும் பெண்களின் பாதுகாப்பிற்காக காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு அது பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருப்பதை போன்று சென்னை காவல்துறையினருக்கு ஸ்மார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரோந்து வாகனத்தில் ஒரு காவலர் நின்று பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சாலைகளில் விதிகளை மீறும் வாகனம் ஓட்டும் பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யும் வகையிலும் பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மது அருந்தி இருந்தால் அதனை கண்காணிப்பது முதலில் சிரமமாக இருந்தது. அதனை போக்கும் விதமாக, உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தலைமை காவலர், இரண்டு காவலர்கள் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெண்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் அவர்களை சோதனை செய்வதோடு அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியும்.

இந்த இரண்டு புதிய திட்டத்தையும் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே மாநகர போக்குவரத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்  பொதுமக்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர், போக்குவரத்து இணை கமிஷனர் எழில் அரசன், வடக்கு மண்டல இணை கமிஷனர் ஜெயகவுரி உள்ளிட்ட போக்குவரத்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : #POLICE #TAMILNADUPOLICE #CHENNAI CITY POLICE #DRUNK AND DRIVE #SPECIAL WOMEN POLICE SQUAD