‘என்சிஏ மூலம்தான் அணிக்கு வரணும்’!.. ‘பும்ராவை திருப்பி அனுப்பிய டிராவிட்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Dec 20, 2019 11:17 PM
என்சிஏவில் உடல் தகுதித் தேர்வு செய்யாததால் பும்ராவை ராகுல் டிராவிட் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை மேற்கொண்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார். உடல்நலம் குணமடைந்ததை அடுத்து, பும்ரா தனது தேர்வு மற்றும் பயிற்சிக்கு தனியார் மருத்துவர்களையும், பயிற்சியாளர்களையும் நியமித்தார்.
பிசிசிஐ விதிப்படி இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சி பெற்று, உடல் தகுதித் தேர்வான பின் அணிக்கு திரும்ப வேண்டும். தற்போது என்சிஏவுக்கு தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பும்ராவுக்கு உடல்தகுதி தேர்வு செய்ய ராகுல் டிராவிட் மற்றும் உடல் தகுதித் தேர்வாளர் ஆஷிஸ் கவுசிக் வந்துள்ளனர். ஆனால் உடற்தகுதி தேர்வு மற்றும் பயிற்சியில் பும்ரா ஆர்வம் காட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விசாகப்பட்டிணத்தில் உள்ள இந்திய அணியோடு பும்ரா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிராவிட் பும்ராவுக்கு உடல்தகுதித் தேர்வு நடத்த முடியாது என திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தெரிவித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி,‘பும்ரா-டிராவிட் விவகாரம் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் இந்திய வீரர்கள் அனைவரும் என்சிஏவில் பயிற்சி பெற்று, உடல் தகுதியை நிரூபித்த பின்னரே அணிக்கு திரும்ப வேண்டும். வருடம் முழுவதும் இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் விளையாட உள்ளனர். பும்ரா கேட்டிருந்தால் என்சிஏ உடல்தகுதி நிபுணர்களை அனுப்பி வைத்திருப்போம். என்சிஏவில் சிறந்த பயிற்சியாளர்களும், உடல்தகுதி நிபுணர்களும் உள்ளனர்’ என தெரிவித்தார்.
மேலும்,‘டிராவிட் மீது அதிக நம்பிக்கை உள்ளது. மிகச்சிறந்த வீரர் அவர். அவரது பங்களிப்பும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருக்கும். டிராவிட் தலைமையில் என்சிஏ சிறப்பாக நடைபெறும்’ என கங்குலி தெரிவித்துள்ளார்.
