'சென்னை'யில எத்தனை பேருன்னு தெரிஞ்சுருச்சு'...'எப்போ வேணாலும் கைது'... கூடுதல் டி.ஜி.பி அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Dec 19, 2019 02:18 PM
குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் எத்தனை பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறித்த பட்டியல், சென்னை மாநகர காவல்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக கூடுதல் டி.ஜி.பி ரவி தெரிவித்தள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில் காவலன் ஆப் குறித்த விளக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட கூடுதல் டி.ஜி.பி ரவி ஆப் குறித்த பல்வேறு விளக்கங்களை மாணவர்களுக்கு அளித்தார். அப்போது பேசிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஒரு குற்றமும் நடைபெறாத போதே, ஜீரோ கிரைம் நிலை உருவாகும். அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை பல்வேறு விதங்களில் மேற்கொண்டு வருகிறது.
சிறுவர்களுக்கு எதிராக ஆபாச படம் பார்ப்பவர்களின் 30 நபர்களின் லிஸ்ட் சென்னை காவல் துறைக்கு அனுப்பி வைத்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். படிக்கும் மாணவர்கள் ஆபாச படம் பார்க்காதீர்கள். அவ்வாறு பார்க்கும் போது உங்களது கவனம் சிதறும். இதனால் படிப்பு மற்றும் எதிர்காலம் குறித்த உங்களது சிந்தனைகளில் தெளிவு இருக்காது. மேலும் கல்லூரி பெண்களிடம் நிறைய தைரியம் இருக்க வேண்டும். உங்களிடம் தவறாக நடந்துகொள்பவரை அடிக்கவும், உதைக்கவும் உங்களுக்கு சட்டத்தில் உரிமை உண்டு. உங்களை மானபங்கம் யாரேனும் செய்ய வந்தால் அவர்களை நீங்கள் சுட்டு கொன்றாலும் குற்றமாகாது.
எனவே பெண்கள் எதற்கும் அச்சப்படாமல் தைரியத்துடன் இருக்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும் ஏ.டி.ஜி.பி ரவி என்ற அண்ணன் இருக்கிறான் என்று சொல்லுங்கள். உங்கள் சகோதரன் காவல்துறை அதிகாரி என உங்களிடம் தவறாக நடந்துகொள்பவரிடம் சொல்லுங்கள், என கூடுதல் டி.ஜி.பி ரவி பேசினார்.