‘ஒரு ரூபாய், 10 ரூபாய் கொடுத்தா போதும்’... 'தீபாவளிக்கு அதிரடி ஆஃபர்'... ‘சென்னையில் குவியும் மக்கள் கூட்டம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 25, 2019 07:38 PM
சென்னையில் துணிக்கடை ஒன்றில் ஒரு ரூபாய்க்கு, புத்தாடைகள் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி என்றாலே புத்தாடை வாங்குவதுதான் நமது வேலையாக இருக்கும். வசதி படைத்தவர்கள் புத்தாடைகள் வாங்கியநிலையில், ஏழை மக்களால் அதிக விலை கொடுத்து புதிய துணிகளை வாங்க முடியாமல் போகும் சம்பவங்களும் நடைபெறும். இந்நிலையில், ஏழை எளிய மக்களும், தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கி அணிய வேண்டும் என்ற எண்ணத்தில், தனது கடையில் புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த்.
இவர், அங்குள்ள எம். சி ரோடு பகுதியில், பெருமாள் டெக்ஸ் என்ற பெயரில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகை முன்னிட்டு, அவரது கடையில் ஒரு ரூபாய்க்கு ஆண்களுக்கான டி-சர்ட்டுகளும், 10 ரூபாய்க்கு பெண்களுக்கான நைட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 11 மணி வரை இந்த சலுகை விலை விற்பனை நடைப்பெறுவதால் இங்கு மக்கள் கூட்டம் அதிகளவில் வருகிறது.
கடந்த 19-ம் தேதி துவங்கிய இந்த விற்பனையானது, சனிக்கிழமை 26-ம் தேதி வரை விற்பனை நடைப்பெற உள்ளதாக கடை உரிமையாளர் கூறியுள்ளார். இலவசமாக துணிகளை வழங்குவதை விட குறைந்த விலையில், துணிகளை வழங்கினால் வாங்கி அணிபவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்று கடையின் உரிமையாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இவரது கடையில் கூட்டம் அலைமோதுவதால், கடை முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.