‘புயல்’ உருவாக வாய்ப்பு... 20 மாவட்டங்களில் 'கனமழை'... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 30, 2019 02:26 PM
அடுத்த 2 நாட்கள் தமிழகம் மற்றும் புதுவையில், கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரிக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அதைத் தொடர்ந்து நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் புயலாக மாற வாய்ப்புள்ளது. புயலாக மாறினால் அதற்கு ‘மகா’ (maha) எனப் பெயரிடப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக குமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, கோவை, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக குமரிக்கடல், லட்சத்தீவு மாலத்தீவு, தென் தமிழக கடற்கரை பகுதிகள், மன்னார் வளைகுடா, தெற்கு கேரளா கடற்கரை பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மழை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.