‘பட்டாக்கத்தியுடன் ரகளை’..‘குடும்பத்தை காக்க காலில் விழுந்த சிறுமிக்கு கன்னத்தில் அடி’ சென்னையை அதிர வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 31, 2019 03:41 PM

சென்னையில் தனது குடும்பத்தினரை கொலை செய்ய வந்தவர்களின் காலில் சிறுமி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai rowdy gang arrested over threatening family

சென்னை திருமங்கலம் அருகே உள்ள பெரியார் தெருவை சேர்ந்தவர் இதயசந்திரன். தீபாவளி தினத்தன்று (27.10.2019) அப்பகுதியை சேர்ந்த தீபக், கலையரசன், யாபேஷ், கோகுல்ராஜ், அப்பு, தினகரன், சூரியபிரகாஷ் ஆகியோர் கைகளில் பட்டாக்கத்தியுடன் இதயசந்திரன் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மற்றும் ஆட்டோக்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

சத்தம் கேட்டு இதயசந்திரனின் மனைவி கோமளா, அவரின் அக்கா ராஜேஸ்வரி, ராதிகா ஆகியோர் வெளியே வந்துள்ளனர். அப்போது அந்த கும்பல் அவர்களை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. இதனால் பயந்துபோன அவர்கள் அடுத்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை தட்டி கேட்ட சாய்குமார் என்வரை அந்த வெட்ட முயன்றுள்ளது. அப்போது அங்கு வந்த இதயசந்திரனின் உறவினர் மகளான 11 வயது சிறுமியை அந்த கும்பல் வெட்ட முயன்றுள்ளது. உடனே அவர்களின் காலில் விழுந்து குடும்பத்தை கொல்ல வேண்டாம் என சிறுமி கெஞ்சியுள்ளார். ஆனால் இரக்கமில்லாமல் சிறுமியின் கன்னத்தில் அக்கும்பல் ஓங்கி அடித்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. இதனை அடுத்து போலீசாரிடம் இதயசந்திரன் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், இதயசந்திரன் தனது வீட்டின்முன் குடும்பத்தினருடன் தீபாவளியன்று பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்துள்ளார். அந்த சமயம் அங்கு வந்த தீபக், பட்டாசு வெடித்தது தொடர்பாக கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தீபக் தனது நண்பர்களை அழைத்து வந்து பட்டாக்கத்தியுடன் தகராறு செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். இந்த காட்சியின் அடிப்படையில் தீபக்கை கைது செய்த போலீசார் தலைமறைவாக மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

News Credits: Vikatan

Tags : #TAMILNADU #CHENNAI #ROWDY #FAMILY