‘புது’ நம்பர்ல இருந்து ‘போன்’ வந்துது... எடுத்ததும் ‘வெடிச்சு’ சிதறிடுச்சு... ‘பதறவைத்த’ இளைஞர்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மர்மப்பொருள் வெடித்துச் சிதறியதால் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (32). எலெக்ட்ரீசியனாக வேலை செய்துவரும் இவருக்கு திருமணமாகி அஞ்சலி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு வெங்கடேசன் வீட்டருகே நின்று சிகரெட் புகைத்துக்கொண்டிருந்துள்ளார். அங்கு அதிகளவில் கொசுக்கள் இருந்ததால் குப்பைகளைச் சேர்த்து புகைமூட்டியுள்ளார்.
அப்போது குப்பையில் இருந்த மர்மப்பொருள் வெடித்ததில் வெங்கடேசனின் முகம், கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறித்துடிக்க, அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்களிடம் அவர், “எனக்கு புதிய எண் ஒன்றிலிருந்து போன் வந்தது. அதை எடுத்துப் பேச முயன்றபோது போன் வெடித்துச் சிதறியது” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், செல்போன் வெடித்ததா அல்லது வெங்கடேசன் எதையாவது மறைக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில், “வெங்கடேசன் குப்பையைக் கொளுத்தியபோது அதில் இருந்த ரசாயன பாட்டில் போன்ற ஏதாவது பொருள் வெடித்திருக்கலாம். அல்லது வேட்டைக்காக வெடிமருத்து தயாரித்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கலாம். விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
