'லைசன்ஸ் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு அனுமதி...' 'கொரோனா பாதிப்பு இருப்பதால்...' தற்காலிக அனுமதி என தமிழக அரசு அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பாதிப்பினால் அனைத்து இடங்களிலும் குடிநீர் கிடைப்பது தடையாக இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை ஜூலை 31-ம் தேதி வரை இயங்க அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சு எடுக்கும் குடிநீர் தயாரிப்பு ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சிவமுத்து என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உரிமம் கோரி விண்ணப்பித்த 690 குடிநீர் ஆலைகளில் 121 ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 569 குடிநீர் ஆலைகள் அளித்த விண்ணப்பங்களை பரிசீலிக்க ஜூலை 31 வரை அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் உரிமம் கோரி விண்ணப்பித்து தகுதியுடைய குடிநீர் ஆலைகளையும், தற்காலிகமாக ஜூலை 31-ம் தேதி வரை இயங்க அனுமதி அளிக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஓரிரு நாளில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தற்காலிக அனுமதி பெற்றுள்ள குடிநீர் ஆலைகள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதம் குடிநீரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன்பின்னர் உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என அரசுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டனர்.
மேலும் அரசின் நிபந்தனையின்படி உற்பத்தி செய்யும் குடிநீரில் 15 சதவீதத்தை அனைத்து குடிநீர் ஆலைகளும், அரசுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க உத்தரவிட்டு இந்த பொதுநல வழக்கை ஏப்ரல் 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தனர்.
